ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். வியட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே ஒரு புகைப்படம் தான்.
தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகிவருகிறார்கள். அந்தவகையில், தற்போது தினம் தோறும் நாம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகிவிட்ட அகதிகளின் துயரத்தை, வலியை உணர்த்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரகணக்கான மக்களை கண்ணீர் சிந்தவைத்து வருகிறது.
ஆனால் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு புகலிடம் தேடி வரும் அகதிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை இந்த புகைப்படத்தை பார்த்த பிறகாவது மாறுமா?
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது, படகு விபத்துகுள்ளாகி மத்தியதரைகடலில் முழ்கி இறந்து போன ஒரு குழந்தையின் இந்த படம், உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்க்க துவங்கியுள்ளது.
உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு வரும் அகதிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மாறுமா?
"என்னையும் அவனுடன் சேர்த்து புதைத்துவிடுங்கள்" கதறியழும் தந்தை
சிரியாவில் நடைபெற்று வரும் போர்ச்சூழலால் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புக, கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்கின்றனர்.
அப்படி துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 23 பேர், 2 படகுகளில் பயணம் மேற்கொண்டனர். அப்போது படகு கவிழ்ந்ததில் 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதில் 5 பேர் பச்சிளம் குழந்தைகள். இந்த விபத்தில் இருந்து 9 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
அதில் மூன்று வயது மட்டுமே ஆன ஐலான் என்ற சிறுவனின் மரணம் கல் மனதை கரைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. அவனது தாயும், 5 வயது அண்ணனும் நீரில் மூழ்கி இறந்தனர்.
இந்நிலையில் இறந்துபோன அக்குழந்தையின் தந்தையான அப்துல்லா குர்தி, "என்னையும் அவனுடன் சேர்த்து புதைத்துவிடுங்கள்" என்று கதறியது இன்னும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.



