GuidePedia

(க.கிஷாந்தன்)

கடந்த காலங்களில் பாராளுமன்ற பதவிகளுடன் இருந்த மலையக அரசியல் தலைவர்கள் தங்களுடைய சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார்களே தவிர மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும் குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளையும் முன்நின்று தீர்த்து கொடுக்கவில்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்…

மலையக மக்கள் எனக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை தீர்த்து வைக்க என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வைத்ததன் காரணமாக இவர்கள் எனக்கு அதிகபடியான வாக்குகளை வழங்கியுள்ளனர்.

தற்போது எனக்கு கிடைத்த அமைச்சு பதவியை வைத்து மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி வேலைகளை தொழிற்சங்க பேதமின்றி முன்னெடுப்பேன்.

அத்தோடு 5 வருட காலங்களில் மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர், சுகாதாரம் போன்ற பல பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன். இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் பெரும்பாலான நிதி மலையக மக்களுடைய அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும். உலக வங்கியும் உதவி செய்யவுள்ளது. இந்த நிதியை வைத்து மலையகத்தில் எல்லா பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்கு சிறந்த முறையில் வேலைத்திட்டங்களை நான் முன்னெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.






 
Top