GuidePedia

ரக்னா லங்கா ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலேயே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படுவதாக பாரிய ஊழல் மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆயுத கொடுக்கல் வாங்கல் பற்றி விசாரணை செய்யப்படுகின்றதே தவிர, கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் விசாரணை நடத்தப்படவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் நீதவான் பிரிதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் சட்டத்தரணிகளுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காலி துறைமுகத்தில் காணப்பட்ட ஆயுதக் கப்பல் தொடர்பில் இதுவரையில் கோத்தபாய ராஜபக்சவிடம், புலனாய்வுப் பிரிவினர், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவினர் ஆகிய தரப்பினர் மூன்று சந்தர்ப்பங்களில் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதே விடயம் குறித்து ஆணைக்குழுவும் கோத்தபாயவிடம் விசாரணை நடத்த வேண்டாம் என சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இதன்போது, கோத்தபாயவிடம் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மட்டுமே விசாரணை நடத்தப்படுகின்றது என நீதவான் சூரசேன தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



 
Top