GuidePedia

பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையை அமைப்பதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கை எடுத்துள்ளார். 

பத்து அங்கத்தவர்களைக் கொண்ட அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சிபாரிசு செய்யுமாறு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

100 நாள் நல்லாட்சி அரசின் கீழ் அரசியலமைப்புச் சபையை அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட்டுள்ள போதிலும், சிவில் சமூக பிரதிநிதிகளை  நியமிப்பதில் இணக்கம் காணாததன் காரணமாக அரசியலமைப்புச் சபை அமைக்கப்படவில்லை.

நாட்டின் பத்து நிறுவனங்களின் தவிசாளர்கள் மற்றும் பணிப்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு சபாநாயகர் தலைமையிலான அரசிலமைப்புச் சபைக்கே உள்ளது. 

இந்த நிறுவனங்கள் அரசியல் தலையீடின்றி இயங்குவதனை உறுதி செய்வதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

புதிய அரசு தெரிவாகி 21 நாட்கள் கழிந்தும் அரசிலமைப்புச் சபை நியமிக்கப்படவில்லை. இதனாலேயே மக்கள் விடுதலை முன்னணி உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசிலயமைப்புச் சபையின் சிவில் சமூக பிரதிநிதிகள் மூவரையும் பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். அப்போதே அரசியலமைப்புச் சபைக்கு இயங்க முடியும். இதற்காகவே மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தை குறித்த தினத்துக்கு முன் கூட்டுமாறு கேட்கிறது. இது தொடர்பாக இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களது கூட்டத்திலே தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. 

அரசியலமைப்புச் சபையில் பதவி வழியாக பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் பெறுகின்றனர். 

பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து ஐந்து அங்கத்தவர்களை நியமிக்க வேண்டும். அதில் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், மூவர் சிவில் சமூகப் பிரதிநிதிகளாகவும் இருக்க வேண்டும். எஞ்சிய இருவரில் ஒருவரை ஜனாதிபதியும், மற்றவரை பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறு கட்சிகளும் நியமிக்க வேண்டும். 

ஏற்கனவே நியமிக்கப்பட்ட அரசியலமைப்புக் குழுவில் சிறுபான்மைக் கட்சிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது அவர் பதவி வழியாக இச்சபைக்கு வருவதனால் சிறு கட்சிகள் சார்பில் புதிய ஒருவர் நியமிக்கப்படவேண்டும். இச்சபையை விரைவாக நியமிக்க அதன் பணிகளை ஆரம்பிப்பதே இன்றுள்ள தேவையாகும். இது குறித்து பொறுப்பானவர்கள் விவைõக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேநேரம் அரசாங்கம் 44 அமைச்சுச் செயலாளர்களுக்கு நேற்று முன்தினம் நியமனம் வழங்கியுள்ளது. 44 பேரில் மூன்று தமிழர்களும், ஒரு முஸ்லிமும் இடம்பெற்றுள்ளனர். இதற்கு முன்பு இரு முஸ்லிம்கள் செயலாளர்களாக இருந்தார்கள். இப்போது அது ஒன்றாகக் குறைந்துள்ளது. மாகாண ஆளுநர் நியமனத்திலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். செயலாளர் நியமனத்திலும் குறைந்த பட்சம் இருவராவது நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். முக்கிய நியமனங்களில் வெட்டுக்கள் இடம்பெறும்போது அந்த வெட்டுக் கத்தரிக்கு முஸ்லிம்கள் அகப்படுவதனை கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நியமனங்களில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், இந்த அரசினையும் பதவிக்கு கொண்டு வருவதில் முஸ்லிம் சமூகம் ஆற்றிய பங்களிப்பின் பெறுமானம் குறைந்து வருகின்றதா என்ற கேள்வியை சமூகம் எழுப்பத் தொடங்கியுள்ளது. 

மேலும் அமைச்சர்களுக்கு செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள். அந்த நியமனங்களிலாவது மற்றுமொரு முஸ்லிமை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா..?






 
Top