GuidePedia

சுமார் ஒரு வருட காலத்திற்கு முன்னராக வாரியபொல பஸ் தரிப்பு நிலையத்தில் செல்வா என அறியப்படும் இளைஞன் பெண் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதன் பின்னணியில் கடந்த வருடம் திலினி என அறியப்படும் பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்பாவி இளைஞன் ஒருவனே தாக்கப்பட்டதாக முன்னர் இவ்விவகாரம் பரப்பப் பட்டிருந்த போதிலும் பெண்கள் சமூக அமைப்பு ஒன்றூடாக குறித்த பெண்(திலினி) போராடிய நிலையில், குறித்த இளைஞன் (செல்வா) தனது குற்றத்தை நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் அன்றைய தினம் பஸ் தரிப்பு நிலையத்தில் பெண்களை சேஷ்டை செய்து இறுதியில் திலினி மூலமாக வெளிவந்த இவ்விவகாரத்தில் குறித்த இளைஞனுக்கு தற்போது ஆறுமாத கால கடூழிய சிறைத்தண்டனை கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், திலினி அமல்காவிற்கு 50 ஆயிரம் ரூபா வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது.
திலினி அமல்கா தான் எதிர்நோக்கிய சம்பவம் தொடர்பில் தெரிவித்ததாவது;
2014 ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 16 ஆம் திகதி கொழும்பு செல்வதற்காக நண்பர்களுடன் சென்றிருந்த போது பஸ் தரிப்பிடத்தில் இளைஞர் ஒருவர் இருந்தார். எமக்கு அருகில் வந்து கேட்டுக்கொண்டிருக்க முடியாத பல விடயங்களை அவர் கூறினார். அவர் அவ்வேளையில் பேசிய மிகவும் மோசமான வார்த்தை காரணமாக எனது நண்பர் ஒருவர் அவரை விரட்டிச் சென்று மூன்று அல்லது நான்கு தடவை அடித்தார். அத்துடன் பஸ் தரிப்பிட நேரக்கணிப்பாளர் அவ்விடத்திற்கு வந்து அந்த இளைஞரைத் தாக்கினார். இதுபோன்றவர்கள் திருந்த வேண்டும். எனவே அவரை அடிக்குமாறும் காலையில் இருந்து நாம் இவரை அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நேரக்கணிப்பாளர் என்னிடம் கூறினார். அதன் பின்னர் மூன்றாவது தடவையாகவே நான் அவரை தாக்கினேன்.
மேலும், பொலிஸ் நிலையத்தில் தாம் எதிர்நோக்கிய சம்பவம் தொடர்பில் திலினி இவ்வாறு குறிப்பிட்டார்;
நான் பொலிஸ் நிலையத்திற்கு சென்றேன். அதன் பின்னர் இதுகுறித்து கடுமையாக விசாரணை செய்யுமாறு வாரியபொல பொலிஸ் நிலையத்திற்கு Fax மூலம் அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து நான் வெளியே வரும் போது வாரியபொல பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 27 ஆம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு கூறினார். அங்கு சென்ற போது நிலையப் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அந்தப் பெண் வந்தார். அவரைக் கைது செய்துள்ளதாக அவர் அந்த அழைப்பு வந்த போது பதிலளித்தார். என்னை சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்புவதாகக் கூறியுள்ளனர். அந்த கருத்துக்களில் வாரியபொல நிலையப் பொறுப்பதிகாரி தொடர்புபட்டுள்ளார். அதன் பின்னர் எனக்கு மனநோய் என செய்தி அனுப்பியுள்ளனர். எனவே, பொலிஸாரின் மூலம் எனக்கு அதிக அநீதி இழைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மனுவொன்று தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திலினியின் தாய் தெரிவித்ததாவது;
பொலிஸார் உள ரீதியாக பாதிப்படையுமாறு செய்தனர். பொது வாகனங்களில், பொது இடங்களுக்குச் செல்லும் நாம் இது போன்ற பல சம்பவங்களை எதிர்நோக்கியுள்ளோம். பெண்கள் என்ற வகையில் தன்மானத்தை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பாக அவ்விடங்களில் இருந்து வந்துள்ளோம். சுய கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் எனது மகள் செய்த விடயம் தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.
சட்டத்தரணி சந்திமா உணுவில இது பற்றி தெரிவிக்கையில்,
வாரியபொல பஸ் நிலையத்தில் திலினி எதிர்நோக்கிய மிக மேசமான ஒரு நிலைமையும் அவர் பொலிஸ் நிலையத்தில் எதிர்நோக்கிய நிலைமையும் சமமானது. அதனை நான் நேரில் கண்டேன். பிரச்சினையொன்றை எதிர்நோக்கிய பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகளினால் கவனிக்கப்படும் விடயம் மிகவும் அருவறுக்கத்தக்கது.
என்றார்.







 
Top