GuidePedia

தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது களுத்துறை, வெலிபென்ன பிரதேச வீடொன்றில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்துவதற்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் அனுமதி பெறப்பட்டிருந்தது.
எனினும் தேர்தல் சட்டவிதிகளை மீறி அக்கூட்டம் அருகில் இருந்த விகாரையொன்றில் நடத்தப்பட்டதுடன், அதனை சுட்டிக்காட்டிய பொலிசாருடனும் ஞானசார தேரர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பாக ஞானசார தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்களுக்கு எதிராக களுத்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. கடந்த வாரம் வழக்கு விசாரணையின் போது மூன்று தேரர்களும் நீதிமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை.
இதனையடுத்து அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஞானசார தேரர் உள்ளிழட்ட மூன்று தேரர்களும் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்களை பிணையில் செல்ல அனுமதித்த பதில் நீதிவான், எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.



 
Top