GuidePedia

திருகோணமலை மாவட்டத்தில் மு.கா துளிர் விட்ட காலம் தொடக்கம் இத் தேர்தலிற்கு முன்பு இடம் பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் மு.கா பாரிய வெற்றியினைச் சுவைத்த வரலாறுகளினையே பதிவாக்கியுள்ளது. இவ்வாறான நிலையில் இம் முறை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் மு.கா தான் பல வருடங்களாக பாதுகாத்து வந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை இழந்துள்ள அதே நேரம் ஐ.தே.க,அ.இ..ம.கா ஆகியவற்றின் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.ஏன் திருகோணமலையில் மு.காவின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது என்பது ஒரு ஆய்விற்குரிய விடயமாகும்.



திருகோணமலை மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் உள்ளன.இதில் மூதூர் தொகுதியானது ஏறத்தாள 62 000  இற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்கினைக் கொண்டுள்ள ஒரு தொகுதியாகும்.இத் தொகுதியில் உள்ள மூதூர்,தோப்பூர் பிரதேசங்களே கடந்த காலங்களில் மு.காவின் பாரிய வாக்கு வங்கியுள்ள பிரதேசங்களாக இருந்து வந்துள்ளன.மூதூரானது மு.காவின் இதயம் என மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபினால் வர்ணிக்கப்பட்டமையிலிருந்து இதனை இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.


மூதூர்,தோப்பூர் பிரதேசங்களில் சுமார் 22 000 அளவிலான முஸ்லிம் வாக்குகள் உள்ளன.திருகோணமலை மாவட்டத்தில் மு.கா தனது பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த வகுக்கப்படும் வியூகங்கள் பிரதானமாக மூதூர்,தோப்பூர் பிரதேசங்களினை மையப்படுத்தி இருந்து வந்துள்ளதை கடந்த கால தேர்தல் பெறுபேறுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.மூதூர்,தோப்பூர் மக்கள் வழமை போன்று எப்போதும் மு.காவிற்கே வாக்களிப்பார்கள் என்ற கணக்கினைப் போட்ட முன்னாள் பிரதி அமைச்சர்  எம்.எஸ் தௌபீக் தனது அபிவிருத்தி,சேவைகளில் மூதூர்,தோப்பூர் மீது அதிக  கவனம் செலுத்தத் தவறி இருந்தார்.இவ் விடயம் மூதூர்,தோப்பூர் மு.கா  ஆதரவாளர்களிடையே  பாரிய குற்றச்சாட்டாக இருந்தமை முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாகும்.



இம் முறை வேட்பாளராக களமிறக்கப்பட்ட எம்.எஸ் தௌபீக் தான் பிரதி அமைச்சராக மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தனது சேவைகளில் 70 சதவீதத்தினை தனது சொந்த பிரதேசமான கிண்ணியாவிற்கு செய்த போதும்,வழமை போன்று இம் முறையும் அவரினால் கிண்ணியாவில் இருந்து பாரிய வாக்கினைப் பெற முடிய முடியவில்லை.கிண்ணியா பிரதேசத்தில் ஏறத்தாள 40000 முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தும், கடந்த 05 வருடங்களாக திருகோணமலை மாவட்டத்தின் ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும், கிண்ணியாவின் வாக்காளர்களை ஒருங்கிணைத்து தக்கவைக்க முடியாமல் போனமையானது எம்.எஸ் தௌபீக் அவர்களின் வெற்றியை பாதித்த விடயங்களில் ஒன்றாக அமைந்தது எனலாம்.எம்.எஸ் தௌபீக்கின் இச் செயற்பாடு அரசினை நம்பி புருஷனையும் இழந்த கதை போன்றாகிவிட்டது.


இம் முறை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மூதூர், தோப்பூர் மக்கள் தங்களது பிரதேசம் சார்பாக ஒரு வேட்பாளரினை களமிறக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.எனினும்,மு.கா தலைமை இவ் விடயத்தில் சற்றேனும் கரிசனை காட்டாமை திருகோணமலையில் மு.கா தனது பிரதிநிதித்துவத்தினை இழந்தமைக்கான பிரதான காரணமாகக் குறிப்பிடலாம்.

இத் தேர்தலில் மு.கா மூதூரில் ஒரு வேட்பாளரினை களமிறக்கத் தவறினால்,அது மு.காவிற்கு பாரிய எதிர் விளைவினை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த கட்சியின் பல மூத்த உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மு.கா தலைவரிற்கு மூதூரினைச் சேர்ந்த திடீர் தௌபீக்கினை மு.கா சார்பாக களமிறக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.மு.காவின் தலைமை அவர்களின் கோரிக்கையினை ஒரு பொருட்டாகவே கணக்கெடுக்காது புறக்கணித்தது என்றே கூற வேண்டும்.

மு.காவில் இருந்து பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்புருமையினை எடுத்துக் கொண்டு மஹிந்த அணியில் இணைந்த திடீர் தௌபீக் கடந்த காலங்களில் மு.காவிற்கு எதிராக அரங்கேற்றிய சில அட்டூழியங்கள் மு.கா தலைவரின் உள் மனதில் பதிந்திருந்தமை, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் தினங்களில் திடீர் தௌபீக் அமெரிக்காவில் இருந்தமை போன்ற காரணிகள் திடீர் தௌபீக் மீது மு.கா தலைமை தனது பார்வையினை உன்னிப்பாக செலுத்தாமைக்கான மு.கா தலைவர் பக்க நியாயங்களாக குறிப்பிடலாம். இதன் பிற்பாடு வேட்பு மனுத்தாக்கலின் பின்னர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த திடீர் தௌபீக் அ.இ.ம.காவோடு இணைந்து மு.காவிற்கு எதிராக முழு மூச்சாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இத் தேர்தலில் மு.கா சார்பாக திடீர் தௌபீக் தான் களமிறக்கப்பட வேண்டும் என்பது மூதூர் மக்களின் எதிர்பார்ப்பல்ல.மூதூரினைச் சேர்ந்த யாராவது ஒரு பொருத்தமான  நபரினை மு.கா சார்பாக களமிறக்கி இருந்தாலும் மூதூர் மக்களின் கனிசமான வாக்கினை இத் தேர்தலில் மு.கா தன் பக்கம் ஈர்த்திருக்க முடியும். கடந்த காலங்களில் மு.காவிற்கு எதிராக மிகப் பெரிய சதி முயற்சிகளில் ஈடுபட்ட தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோரினை மன்னித்த மு.கா தலைமையினால், ஏன் திடீர் தௌபீக்கினை மன்னிக்க இயலாது போனது ? இவர்களின் கடந்த கால மு.காவிற்கு எதிரான செயற்பாடுகளோடு திடீர் தௌபீக்கின் எதிர்ச் செயற்பாட்டினை ஒப்பீட்டளவில் நோக்கினால் திடீர் தௌபீக்கின் செயற்பாட்டினை ஒரு பொருட்டாகவே கணக்கு எடுக்க முடியாது.

திருகோணமலை மாவட்டத்தில் மு.கா சார்பாக இரண்டு வேட்பாளர்களினை தனது கட்சியில் களமிறக்க ஐ.தே.க அனுமதி அளித்திருந்தது.எனினும்,மு.காவானது NFGG உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தனது ஒரு வேட்பாளரிற்கு பதிலாக மூதூரைச் சேர்ந்த NFGG யின் Dr ஷாஹிர் அவர்களை களமிறங்கி இருந்தது.இத்தேர்தலில் திருகோணமலையில் மு.கா சார்பாக நேரடியாக கின்னியாவினைச் சேர்ந்த எம்.எஸ் தௌபீக் மாத்திரமே களமிறக்கப்பட்டார்.



இவ்வாறு NFGG இற்கு ஒரு வேட்பாளரினை விட்டுக் கொடுக்காது  மு.காவானது மூதூரில் ஒரு வேட்பாளரினையும்,கின்னியாவினைச் சேர்ந்த எம்.எஸ் தௌபீக்கினையும் களமிறக்கி ஒற்றுமையாக தனது பிரச்சாரத்தினை முன்னெடுத்திருந்தால் ஐ.தே.க திருகோணமலையில் பெற்ற இரு ஆசனங்களினையும் மு.கா தன் வசப்படுத்தி இருக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.குறைந்த பட்சம் NFGG யினைச் சேர்ந்த Dr ஷாஹிரும் மு.கா வேட்பாளரான எம்.எஸ் தௌபீக்கும் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தினை மேற் கொண்டிருந்தாலும் இரு வேட்பாளர்களினையும் வெற்றி பெறச் செய்திருக்கலாம். மேற் குறிப்பிடப்பட்ட விடயங்களை எடுத்து நோக்கும் போது திருகோணமலையில் மு.கா தனது பிரதிநிதித்துவக் காப்பிற்கான திட்டமிடல்,வியூகங்கள் வகுத்தலில் பொடு போக்காக செயற்பட்டுள்ளது என்றே நினைக்கத் தோன்றுகிறது.அம்பாரை மற்றும் மட்டக்களப்பு பிரதிநிதித்துவக் காப்பில் மு.கா காட்டிய அக்கரையில் ஒரு சிறு பங்கேனும் இங்கு காண முடியவில்லை.மட்டகளப்பு மாவட்ட மு.காவின் பிரதிநிதித்துவ காப்பிற்கான மு.காவானது NFGG உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம்  மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதித்துவத்தினை மு.காவினால் காப்பாற்ற முடிந்தாலும் திருகோணமலை பிரதிநிதித்துவ இழப்பிற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.



மு.காவின் மூலம் சுக போகங்களினை அனுபவிக்கக் கூடிய அனைத்து விடயங்களிலும் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ் தௌபீக் மூதூர்,தோப்பூர்,கிண்ணியா, ஜமாலியா, குச்சவெளி போன்ற பிரதேசங்களினைச் சேர்ந்த குறித்த சில விரல் விட்டு எண்ணக் கூடியவர்களினை மீண்டும் மீண்டும் உள் வாங்கி இருந்தார்.மேலும்,முன்னாள் பிரதிஅமைச்சரின் பிரத்தியேக ஆளனியில் நியமிக்கப்பட்டவர்களின் மீது சில வெறுப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன.இவைகள் இதனால் ஆதரவாளர்களிடையே ஏற்படுத்திய அதிருப்தி மு.காவின் திருகோணமலை வாக்குச் சரிவுக்கான ஒரு மிக முக்கியமான காரணமாக இங்கு குறிப்பிடலாம்.

திருகோணமலை மாவட்டத்தில் மு.காவினைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களாக புல்மோட்டை ஆர்.எம்.அன்வர், மூதூரை சேர்ந்த சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் ஆகியோர் உள்ளனர்.இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து இத் தேர்தலில் எச் சந்தர்ப்பத்திலும் எம்.எஸ் தௌபீக்கின் வெற்றிக்கு உழைக்கவில்லை.இவர்கள் இருவரிடையே நிலவும் ஒன்றுமை இன்மை காரணமாக திருகோணமலையில் தேர்தல் இடம்பெற்ற காலத்தில் சில விடயங்களினை திறம்பட செய்வதில் மு.கா பல சவால்களினை எதிர் கொண்டது.இவர்களின் ஒன்றுமை இன்மை மு.கா ஆதரவாளர்களிடையே பாரிய அதிருப்தியையும்,விரிசலினையுமே தோற்றுவித்திருந்தது.மூதூரினைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி லாஹிர் மீது எழுந்துள்ள சில விமர்சனங்கள், அவரின் சில பிழையான செயற்பாடுகள் மு.காவிற்கு செல்லும் மூதூர் வாக்குகளினைத் தடுப்பதில் முக்கிய வகி பாகம் வகித்துள்ளதாக பல மு.கா போராளிகள் இன்றுவரை கருதுகின்றனர்.


இத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு ஓரிரு மாதங்கள் முன்பு மூதூர் மு.காவின் மத்திய குழு கலைக்கப்பட்டிருந்தது.மூதூர் மு.காவின் மத்திய குழுவானது திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறப்பாக செயற்பட்ட ஒரு குழுவாகும்.இக் குழுவானது இற்றை வரை மீண்டும் புணரமைக்கப்படவில்லை என்பது மூதூர் மு.கா ஆதரவாளர்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.அத்துடன் மூதூரில் தேர்தல் காலத்தில் தோன்றிய அதிருப்தி குழுவினை எம்.எஸ்.தௌபீக் அவர்கள் திறன்பட கையாண்டு, அவர்களை மு.கா பக்கம் இணைத்துக் கொள்ளவதற்கு எது வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.


இத் தேர்தலின் போது திருகோணமலை மக்களினை மு.கா தனது பக்கம் திசை திருப்புதல், மு.கா போராளிகளினை அறிவுறுத்தல், சந்தர்ப்பத்திற்கு ஏற்ற திட்டங்கள் தீட்டல், முகாமைத்துவம் போன்ற பல்வேறு தேவைகளுக்கு திருகோணமலையின் பல பிரதேசங்களிலிருந்தும் அப் பிரதேசத்திற்கான மத்திய குழுவொன்றின்  அவசியம் உணரப்பட்டிருந்தது.மத்திய குழுக்கள் மீண்டும் புணர்நிர்மானம் செய்யப்படாமையினால் மேலே குறிப்பிடப்பட்ட பல விடயங்களினை உரிய நேரத்தில் மு.காவினால் செய்ய முடியாது போனது.


மேற்குறிப்பிட்டுள்ள காரணிகளே திருகோணமலையில் மு.காவின் பிரதிநிதித்துவ இழப்பிற்கான பிரதான காரணிகளாக  குறிப்பிடலாம்.திருகோணமலை மு.கா வாக்கு வங்கியினை வெள்ளம் அடித்துச் செல்ல முன் மு.கா அணை கட்ட  தவறி விட்டது.கடந்த மாகாண சபைத் தேர்தலில் 12 000 வாக்குகினைப் பெற்று கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகிய இம்றான் மஹ்ரூபிற்கும்,மிகச் சிறிய எண்ணிக்கையான வாக்கினைப் பெற்று தோல்வியினைத் தழுவிய சின்ன மஹ்ரூபிற்கும்  மு.காவினை சாணக்கியமற்ற செயற்பாடு திருகோணமலையில் பலமான அடித்தளத்தினை வழங்கியுள்ளது.இதனை மு.கா எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறது?





துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

**mHq**




 
Top