GuidePedia

நான் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தவித்துக் கொண்டிருக்கும் வன்னி மாவட்ட அப்பாவி ஏழை தமிழ், முஸ்லிம் மக்களுக்கே பெரும் தோல்வியாக இருக்கும் என முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாறூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்புடன் இந்தமுறை பாராளுமன்ற தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை எனது கட்சி செய்தபோது நான் பாராளுமன்றம் தெரிவு செய்யப்படும் போது மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சு தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் நான் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட விடயம் வன்னிமாவட்ட அரசியல் வாதிகள் சிலருக்கு இலாபமாகவும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தவித்துக் கொண்டிருக்கும் வன்னி மாவட்ட அப்பாவி ஏழை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெரும் தோல்வியாகவே இருக்கும் என நான் எண்ணுகின்றேன்.

கடந்த ஐந்து வருடங்களாக வன்னி மக்களின் மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்ற பிரச்சினைகளை மக்களோடு மக்களாக இருந்து அறிந்தவன். 

அதுமாத்திரமின்றி அதற்கான தீர்வுகளை எப்படிச் செய்யவேண்டும் என்று களத்தில் நின்று அரச அதிகாரிகள் , சம்பந்தப்பட்ட மக்களின் கருத்துக்களை அறிந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தது மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் தெளிவுபடுத்தியுள்ளேன். 

எனவேதான் நான் இந்தமுறை ஜனாதிபதி தலைமையிலான கட்சியியோடு மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சு வழங்க வேண்டும் என்ற உடன்படிக்கையை செய்து கொண்டோம்.

ஆனால் தேர்தல் களத்தில் நடைபெற்றது என்ன? இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தோடு தன்னைத்தியாகம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களில் நான் முன்னின்று செயற்பட்டவன் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

வன்னி மாவட்டத்தில் அழிக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினை புனரமைப்பதற்காக வன்னி மாவட்ட பிரதம அமைப்பாளர் பதவி எனக்கு 2014 டிசம்பர் மாதம் வழங்கப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் பாராளுமன்ற தேர்தல் வேட்புமனுவில் ஒப்பமிடும் இறுதித் தருணம் வரை (2015.07.12) ஐக்கிய தேசியக் கட்சியை வன்னி மாவட்டத்தில் வளர்க்கும் பணியை இரவு பகலாக முன்னெடுத்தேன். ஆனால் வன்னி மாவட்ட ஐ.தே.க ஆதரவாளர்கள், போராளிகளின் எண்ணங்களுக்கு மாற்றமாக ஐ.தே.க வேற்புமனுவில் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதனால் அக்கட்சியிலிருந்து ஒதுங்கி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு புரிந்தணர்வு உடன்படிக்கையின் மூலம் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற கட்சியின் தலைவனாக தேர்தல் களத்தில் வெற்றிலைச்சின்னத்தில் முதன்மை வேட்பாளராக களமிறங்கவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியை இறுதிவரை வன்னியில் வளர்த்து , ஒருங்கிணைத்துவிட்டு அந்த கட்சிக்கு எதிராக களத்தில் இறங்கியது கூட எனக்கு பாரிய சவாலாக அமையவில்லை. 

ஆனாலும் தேர்தலுக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னரும் வன்னியின் தேர்தல் களம் எனக்கு சாதகமாகவே காணப்பட்டது.

ஆனால் அரசியல் அதிகாரத்தில் தொடர்ந்து நிலைத்து நிற்கவேண்டும் அரசியலுக்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று சில வேட்பாளர்கள் எண்ணியதனால் வாக்களிக்கும் மக்களை போட்டிபோட்டுக்கொண்டு பிழையாக வழிநடத்த முற்பட்டனர்.

என்னை அரசியலிலிருந்து தோற்கடிப்பதற்காக வாக்காளர்களுக்கு என்ன விலையும் கொடுக்க சில வேட்பாளர்கள் தயாராக இருந்தனர். 

எனக்கு சாதகமான தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களக் கிராமங்கள் பல வழிகளில், பல முனைகளில் குறிவைக்கப்பட்டன. 

எனது ஆதராவளர்களிடம் பேரம் பேசப்பட்டது. தேவையானவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது, சில இடங்களுக்கு பணமும் உயர்ரக மதுபான போத்தல்களும் என்னைத் தோற்கடிப்பதற்கு விலையாக கொடுக்கப்பட்டன.

 இதை முறியடிப்பதற்கு நானும் பணத்தையும், மதுபான போத்தல்களையும் வழங்கியிருக்கமுடியும், ஆனால் அப்படியானதொரு வெற்றி எனக்கு தேவையில்லை. 

என்னைப்படைத்த இறைவன் தடுக்கின்ற வழியில் சென்று நான் வெற்றிபெற வேண்டிய எந்த அவசியமும், தேவையும் எனக்கில்லை.

எனது ஐந்துவருட பாராளுமன்ற வாழ்வில் எனது சம்பளத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குறிய சலுகைகளைவிட அரசியலில் மேலதிகமாக எதனையும் நான் உழைத்ததில்லை. 

அந்த வகையில் இதற்குப் பிறகு அரசியல் பதவிகள் இருந்தாலும் உழைக்கப்போவதுமில்லை. 

எனவே அற்பமான இந்த உலகத்தில் ஆட்சி, அதிகாரங்களுக்கு என்னைப் படைத்த, நான் விசுவாசிக்கின்ற இறைவனுக்கு மாற்றமாக செயற்பட்டு ஆட்சி அதிகாரத்தை நான் பெற்றால் அடுத்த கணம் மரணம் வந்துவிட்டால் நிரந்தரமான மறு உலக வாழ்வு தோல்வியடைந்துவிடும். 
இந்த உலகில் மனிதனாகப் பிறந்தவர்கள் அடையக் கூடாத 
தோல்விதான் அது.

எனவே, இந்த உலகத்தில் நான் அரசியலில் தோற்றாலும், இறந்ததற்குப் பின்னுள்ள வாழ்க்கைக்கான முதலீட்டில் இறைவனின் சோதனைப் பரீட்சையில் நான் வெற்றிபெற்றுள்ள திருப்தியில் நான் இருக்கின்றேன் (அல்ஹம்துலில்லாஹ்).

எனினும் நான் இத்தேர்தலில் தோற்றாலும் (இன்ஸா அல்லாஹ்) வன்னி மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் இதர தேவைகளில் என்னால் முடியுமான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளையும், ஆலோசனைகளையும் எதிர்காலத்தில் முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்-றிப்கான் கே. சமான்.




 
Top