GuidePedia

அராபிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் தொழில்துறைகளில் முதலீடு செய்வதற்கு கூடுதலான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சையித் அல் நயான் உடனான சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் சொர்க்காபுரியாக இலங்கை மாற்றமடைய வேண்டுமென்பது புதிய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.
தேசிய அரசாங்கத்தின் கொள்கை முன்னெடுப்பின் பிரகாரம் நாடு தழுவிய ரீதியில் சுமார் 45 பொருளாதார வலயங்கள் உருவாக்கப்படவுள்ளன. அவற்றில் முதலீடு செய்ய முன்வருமாறு ஐக்கிய அரபு இராச்சிய வர்த்தகர்களுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றது.
தற்போதைக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் இரண்டரை இலட்சம் இலங்கைப் பணியாளர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களின் தொழில்திறமைகளை மேம்படுத்த அரசாங்க மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதை மறந்து விடக் கூடாது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் விரிவான முறையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




 
Top