உலகின் மனசாட்சியை உலுக்கிய சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவனின் மரணத்திற்குப் பிறகு அகதிகளின் வாழ்வில் புதிய மாற்றம் சிறிய அளவிலேனும் தொடங்கியுள்ளது.
இதுவரை ஹங்கேரியிலிருந்து பேருந்து மூலம் பயணம் செய்து வந்த அகதிகளைப் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுத் தடுத்து வந்த ஆஸ்திரிய அரசு அண்மையில் அய்லன் என்ற 3 வயதுக் குழந்தை துருக்கிக் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சூடு பிடித்ததை அடுத்து அதிகரித்த நெருக்கடி காரணமாக தனது கொள்கையைச் சற்றுத் தளர்த்தியுள்ளது.
சிரிய உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி வந்த அகதிகள் 4 ஆயிரம் பேர், நேற்று புடாபெஸ்ட்டில் இருந்து பேருந்துக்கள் மூலம் ஆஸ்திரியாவின் எல்லையிலுள்ள நிக்கல்ஸ்டோர்ப் நகரை வந்தடைந்தனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் சூடான போர்வைகளை வழங்கி ஆஸ்திரியாவின் செஞ்சிலுவைச் சங்கம் இந்த அகதிகளை வரவேற்றது.
மேலும் தமது நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ள அகதிகள் விரும்பினால் தமது நாட்டிலேயே தஞ்சம் கோரலாம் அல்லது ஜேர்மனிக்குச் செல்லலாம் என ஆஸ்திரிய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜோகன்னா மிக்லிட்னர் வெளியிட்டுள்ள செய்தியில், “3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் நேற்றிரவு ஆஸ்திரியா வந்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கலாம். இதற்குள்ளாகவே, 10 அகதிகள் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளனர். எங்கள் நாட்டு போலீசார் இந்த மக்கள் மீதும், அவர்களின் குடும்பம் மற்றும் குழந்தைகள் மீதும் எந்த விதமான அடக்குமுறையையும் பிரயோகிக்க மாட்டார்கள் என்பதை அழுத்தத்துடன் குறிப்பிடுகிறேன்.” என்றார்.