(எஸ்.அஷ்ரப்கான்)
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் உட்பட 5 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. எனவே அது பாரிய வளர்ச்சி கண்டிருக்கின்றது. கட்சியின் வளர்ச்சியை மேலும் முன்னெடுப்பதற்காக மிகவும் தீர்க்க தரிசனத்துடன் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் புத்தளத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை வழங்கியிருக்கின்றார்.” என்று பலரும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு எழுதுகின்றவர்கள் றிஷாட் பதியுதீனை திருப்திப்படுத்துவதற்காக எழுதுகின்றார்களா ? அல்லது அரசியலை ஆய்வு செய்யத் தெரியாமல் தமது அறியாமையால் எழுதுகின்றார்களா ? என்பது புரியவில்லை.
கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளை மாவட்ட ரீதியாக ஆராய்வோம்.
வட கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பது வழக்கம். ஸ்ரீ. ல. மு. கா. வை பொறுத்தவரை மறைந்த தலைவரின் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய வாக்குவங்கி ஆங்காங்கே இருக்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் சகோதரர் நபவி அ.இ.ம.கா. சார்பாக போட்டியிட்டார். நபவி ஸ்ரீ.ல.சு. கட்சியை சேர்ந்தவர். அவருக்கென்று ஒரு தனிப்பட்ட கணிசமான வாக்கு வங்கி புத்தளத்தில் இருக்கின்றது. இந்தத் தேர்தலில் நபவி ஸ்ரீ.ல. மு.கா. வின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டிருந்தாலும் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டிருந்தாலும் இதே வாக்கினைத்தான் பெற்றிருப்பார்.
ஏனெனில் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்ட வெற்றிலைச் சின்னத்திற்கு எப்படியும் வாக்களித்திருக்க மாட்டார்கள். எனவே அ.இ.ம.காங்கிரசோ அல்லது அதன் தலைவர் றிஷாட் பதியுதீனோ நபவியின் வாக்குகளுக்கு காரணம் என்று கூறுவது அறிவுடைமையாகாது.புத்தளத்திற்கு தேசியப்பட்டியல் வழங்கியது அ.இ.ம.கா.சின் வளர்ச்சிக்காக என்று கூறுவது இந்நாட்டு முஸ்லிம்கள் அரசியல் அறிவிலிகள் என்பதற்குச் சமமாகும்.
ஏனெனில் இந்நாட்டின் முஸ்லிம் கட்சி அரசியல் உச்சத்தில் இருந்தது மறைந்த தலைவரின் காலத்திலாகும். அந்தக் காலத்திலேயே மு.கா. வினால் புத்தளத்தில் 1 ஆசனம் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்து றவூப் ஹக்கீம் பாயிசுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கினார். அப்பொழுதும் ஸ்ரீ.ல.மு.கா.சை வளர்த்து 1 ஆசனம் பெற்றுக்கொள்ளவும் முடியவில்லை. பாயிஸ் தன்னை வளர்த்து ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியவில்லை. இவற்றிற்கான காரணம் வட கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் இன்னும் முஸ்லிம் கட்சி அரசியலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாகும். மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசியலை சார்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள். இந்நிலையில் 30 ஆண்டுகளாக தனது கட்சியை ஸ்ரீ.ல.மு.கா வினால் புத்தளத்தில் வளர்த்துக் கொள்ள முடியாத நிலையில் இந்தத் தேர்தலில் நபவி ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெறாத நிலையில், புத்தளத்தில் ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட இல்லாத அ.இ.ம.கா. தேசியப்பட்டியல் மூலம் தன்னை வளர்த்து தேசிய ரீதியாகவும் அதன் மூலம் வளர முயற்சிக்கின்றது என்று கூற முற்படுவது காதில் பூ வைப்பதாகும்.
புத்தளத்திற்குச் சொல்லப்பட்ட அனைத்தும் குருநாகல் மாவட்டத்திற்கும் பொருந்தும். அநுராதபுர மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் பெரும் பணச் செலவில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவையும் பெற்று அந்த வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கின்றார். இது அவரது தனிப்பட்ட வெற்றியாகும்.
அநுராதபுர மாவட்டத்திலுள்ள முஸ்லிம் வாக்குகள் சுயமாக ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்வதற்கு போதுமானதல்ல. அது மட்டுமல்லாமல் அந்த வேட்பாளர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அ.இ.ம.கா ஸின் சார்பில் போட்டியிடுவதாக குறிப்பிடவில்லை. என்பது மட்டுமல்லாமல் அ.இ.ம.கா. சார்பாக அவருக்கு உதவி செய்யச் சென்ற இரண்டொருவருக்கு அ.இ.ம.கா. ஸின் பெயரைக் குறிப்பிட்டால் கிடைக்கின்ற வாக்குகளும் கிடைக்கால் போய்விடும். ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரையே குறிப்பிட வேண்டும். என்று அப்போது ஆலோசனை கூறப்பட்டிருக்கின்றது.
குறித்த வேட்பாளருக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்தார் என்பதைத் தவிர அநுராதபுர மாவட்ட வெற்றிக்கும் அ.இ.ம.கா. கட்சிக்கும் எதுவித் சம்மந்தமுமில்லை. இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அநுராதபுர மாவட்டத்தில் வளர்ச்சியடைந்திருக்கின்றது, என்று கூற முடியுமா ? வேண்டுமானால் வெற்றிபெற்ற வேட்பாளர் போட்டியிட சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்தமைக்காக றிஷாட் பதியுதீனுக்கு சில காலம் விசுவாசமாக இருக்கலாம். ஆனால் அ.இ.ம.கா. சுக்கும் அநுராதபுரத்திற்கும் என்ன சம்மந்தம் ?
திருகோணமலை மாவட்டத்திற்கு வருவோம். அங்கு வெற்றி பெற்றவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்.
இறுதிச் சமயத்தில் வேட்புமனுச் சந்தர்ப்பம் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு மறுக்கப்பட்டபோது றிஷாட் பதியுதீன் அவருக்கு அந்த சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுத்தார். ஆனால் தேர்தலில் குறித்த வேட்பாளர் தன்னை ஒரு ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதியாகவே காட்டிக் கொண்டார். எனவே திருகோணமலை மாவட்டத்தில் அ.இ.ம.கா. வளர்ச்சியடைந்திருக்கின்றது. என்பது ஒரு அறிவுபூர்வமான வாதமாகுமா ? மு.கா வின் வேட்பாளர் அங்கு தோல்வியடைந்தார் என்பதை வைத்து அது அ.இ.ம.கா. வின் வளர்ச்சி என காட்ட முற்படுவது ஏற்புடையதா ? ஒருவர் பதவியில் நீண்டகாலம் இருக்கும்பொழுது அவரின் ஆதரவு தளர்வடைவது இயற்கை. இதன் அடிப்படையில் மு.கா. வின் வேட்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கிற்கான ஆதரவு குறைந்து முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான மஹ்ருபிற்கு ஆதரவு கூடியது. அவரும் தமது தேர்தல் பிரச்சாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியையே முன்னுரிமைப்படுத்தினார். இந்நிலையில் அ.இ.ம.கா. எந்த அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் தான் வளர்ச்சி பெற்றிருப்பதாக கூறமுடியும் ?
எனவே, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் பெறப்பட்ட 2 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரைக் கூறி பெறப்பட்ட ஆசனங்கள் ஆகையால் அ.இ.ம.கா. சின் ஆசனத் தொகையிலிருந்து யதார்த்தத்தில் கழிக்கப்பட வேண்டியதாகும். கட்சி என்பதற்கு அப்பால் றிஷாட் பதியுதீன் ஐ.தே.கட்சியில் போட்டியிட சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்தார் என்பதற்காக அவர்கள் சில காலம் தனிப்பட்ட விசுவாசத்தைத் தெரிவிக்கலாம்.
அ.இ.ம.கா. பெற்றுக் கொண்ட உண்மையான ஆசனங்கள் வன்னியிலும் மட்டக்களப்பிலும் பெறப்பட்ட 2 ஆசனங்கள் மாத்திரம்தான். ஆனாலும் இங்கும் கட்சி வளர்ந்திருக்கின்றதா ? என்ற கேள்வியை எழுப்பினால் இங்கு உண்மையில் இரு மாவட்டங்களிலும் கட்சியே இருக்கின்றதா ? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிவரும். அதாவது இந்த இரண்டு மாவட்டங்களிலும் அ.இ.ம.கா சுக்கு என்று ஒரு கிளையோ மத்திய குழுவோ கிடையாது. கட்சியின் கட்டமைப்பு எதுவும் இம்மாவட்டங்களில் இல்லை. சுருங்கக் கூறின் இவ்விரு மாவட்டங்களிலும் கட்சியில்லை. வன்னி மாவட்டத்தில் றிஷாட் பதியுதீன் ஒவ்வொரு ஊரிலும் தன்னுடைய தனிப்பட்ட பிரதிநிதியை நியமித்திருக்கின்றார். அவர்களுக்கூடாகவே அவர் அனைத்து விடயங்களையும் கையாளுகின்றார். எனவே வன்னியின் வாக்குகள் என்பது றிஷாட் பதியுதீன் என்கின்ற தனி மனிதனின் வாக்குகளே தவிர, அ.இ.ம.கா. என்கின்ற ஒரு நிர்வனத்திற்குரிய வாக்குகள் அல்ல. மறு வார்த்தையில் கூறப்போனால் ஸ்ரீ.ல.மு.கா போன்று அ.இ.ம.கா. ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்சியாக வன்னியில் இல்லை. அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் அமைச்சர் அமீர் அலி ஒவ்வொரு ஊரிலும் தனது அபிவிருத்திக் குழுக்களை வைத்திருக்கின்றாரே தவிர இன்றுவரை அங்கு ஒரு கட்சிக் கிளையோ மத்திய குழுவோ இல்லை. வேறு எந்த கட்டமைப்போ கிடையாது. மறுவார்த்தையில் கூறினால் தவிசாளரின் தொகுதியிலேயே கட்சியில்லை. கடந்த தேர்தலில் அமீர் அலி வெற்றி பெற்றதற்கும் அ.இ.ம.கா. என்ற நிறுவனத்திற்கும் எதுவித தொடர்புமில்லை. மாறாக கல்குடாவிற்கு எம்.பி. வேண்டும் என்கின்ற பிரதேச உணர்வு துாண்டப்பட்டு அப்பிரதேச சில தமிழ் வாக்குகளும் இணைந்து பெறப்பட்டதே அமீரலியின் பிரதிநிதித்துவமாகும். எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் அ.இ.ம.கா. வளர்ச்சியடைந்திருக்கின்றது என்பது பொருத்தமான கூற்றா ? என்று நாம் சிந்திக்க வேண்டும்.
இறுதியாக அம்பாரை மாவட்டத்திற்கு வருவோம். இலங்கையில் அ.இ.ம.கா. வின் கட்டமைப்பு இருக்கின்ற ஒரேயொரு மாவட்டம் அம்பாரை மாவட்டமாகும். காரணம் அதன் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தனி ஒருவனாக அம்பாரை மாவட்டத்தில் சூறாவளி காற்றாக செயற்பட்டு இந்தக கட்டமைப்பு வேலைகளைச் செய்தார். அவரின் செயற்பாட்டு வேகம் எந்தளவு இருந்ததென்றால் தேர்தலுக்கு இரண்டொரு மாதங்களுக்கு முன்பிருந்தே அம்பாரை மாவட்டத்தில் இம்முறை மயிலுக்கு ஒரு ஆசனம் கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்படுகின்ற அளவு இருந்தது. அவ்வாறான கருத்துக்களின் பதிவீடுகள்தான் இன்று போட்டியிட்ட பல வேட்பாளர்களுக்கு அ.இ.ம.கா சில் போட்டியிட வருகின்ற தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுத்திருந்தது.
ஆனாலும் அ.இ.ம.கா. பெற்றுக்கொண்ட 33 ஆயிரம் வாக்குகளும் அ.இ.ம.கா.சின் வாக்குகள் என்று யாராவது எழுதினால் அவர் உண்மையில் அரசியலை ஆய்வு செய்யத் தெரியாதவர் என்றே கூற வேண்டும். ஏனெனில் 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் மு.கா விற்கு எதிரான அணிக்கு அளிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்பு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் அல்லது அதன் பின்னர் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் எதனை எடுத்துப் பார்த்தாலும் சுமார 45 ஆயிரம், 50 ஆயிரம் வாக்குகள் மு.கா விற்கு எதிராக அளிக்கப்பட்டே வந்திருக்கின்றன. மறு வார்த்தையில் கூறுவதாயின் இந்த எதிர் வாக்குகள் போக மிகுதியான வாக்குகள் மு.கா. வின் சொந்த வாக்குகளாக தொடர்ந்தும் தளம்பல் இல்லாமல் இருந்து வந்திருக்கின்றன.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலை எடுத்துக்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சுமார் 95 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 10 ஆயிரம் வாக்குகள் நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. 85 ஆயிரத்திற்கு சற்று அதிகமான வாக்குகள் மு.கா. விற்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. எனவே மு.கா வின் வாக்குகளில் இம்முறையும் தளர்வு ஏற்படவில்லை. அவ்வாறாயின் அ.இ.ம.கா. பெற்றுக்கொண்ட 33 ஆயிரம் வாக்குகள் யாருடைய வாக்குகள் ? வழமையாக மு.கா விற்கு எதிராக அளிக்கப்பட்டு வந்த 55 ஆயிரம் வாக்குகள் இம்முறை இரண்டாகப் பிளவுபட்டு அதில் 33 ஆயிரம் வாக்குகள் அ.இ.ம.கா சுக்கும், மிகுதி வாக்குகள் தேசிய காங்கிரசுக்கும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்கள் களத்தில் இல்லாமை, இரண்டு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மஹிந்த ராஜபக்ஸவுடன் கூட்டுச் சேர்ந்ததில் ஏற்பட்ட சலிப்பு. எனவே மு.கா விற்கு வாக்களிக்க முடியாது. அதாஉல்லாவிற்கும் வாக்களிக்க முடியாது என்று அங்கலாய்த்த மக்களுக்கு கண் முன் தெரிந்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். அதனால் கிடைத்தது 33 ஆயிரம் வாக்குகள்.
இத்தேர்தலில் பேரியல் அஷ்ரப் களத்தில் இருந்திருந்தாலோ அல்லது அதாஉல்லா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவளித்திருந்தாலோ அ.இ.ம.கா. இம்முறையும் அம்பாரை மாவட்டத்தில் காலெடுத்து வைக்க முடியாமல் போயிருக்கும். இதுவே கள நிலவரமாகும். எனவே மு.கா வின் வாக்குகளில் தளம்பல் ஏற்படவில்லை. அ.இ.ம.கா. பெற்றுக் கொண்டது காலாகாலமாக மு.கா விற்கு எதிராக இருந்துவந்த வாக்குகளில் ஒரு பகுதியே என்பது மாத்திரமல்லாமல் அவ்வாக்குகளை அளிப்பதற்கு பொருத்தமான மாற்று அணி இல்லாததனால் அ.இ.ம.கா சுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளே தவிர அவை அ.இ.ம.கா சின் சொந்த வாக்குகள் அல்ல. அல்லது றிஷாட் பதியுதீனால் ஏற்பட்ட அலையுமல்ல. இதனை தெளிவுபடுத்துவதற்கு ஒரு சிறிய உதாரணத்தை கூறலாம்.
சாய்ந்தமருது கிராமம் நுாற்றுக்கு 95 வீதம் மு.கா. விற்கு பாரம்பரியமாக வாக்களித்து வருகின்ற ஒரு ஊராகும். இத்தேர்தலில் மு.கா வைச் சேர்ந்த இரண்டு ஜாம்பவான்கள் அ.இ.ம.கா. சில் இணைந்து கொண்டார்கள். தேர்தல் காலத்தில் றிஷாட் பதியுதின் அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் செய்த 4 நாட்களுள் 3 நாட்களின் அரை பகுதியை சாய்ந்தமருதிலேயே செலவிட்டார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசினார், கிளைக் கூட்டத்தில் பேசினார், மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் பேசினார், வர்த்தக சங்கத்தினருடன் பேசினார், பள்ளிவாயல் நிர்வாகத்தினருடன் பேசினார். போதாக்குறைக்கு தேசியப்பட்டியல் தருவதாகவும் பொய் வாக்குறுதிவேறு கொடுத்தார். ஆனாலும் சுமார் 2800 வாக்குகளுக்கு மேல் நகரவில்லை. வழமையாகவே சுமார் 1500 வாக்குகள் மு.கா விற்கு எதிராக சாய்ந்தமருதில் போடப்படுவது வழமை. அவ்வாறாயின் றிஷாட் அலை எங்கே ?
அதேநேரம் றிஷாட் காலடிகூட எடுத்து வைக்காமல் ஒரு கூட்டத்தில் கூட பேசாமல் கல்முனையில் 4300 வாக்குகள் வை.எல்.எஸ் இன் முயற்சியினால் பெறப்பட்டிருக்கின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
மறுபுறத்தில் மு.கா. வில் போட்டியிட்ட 3 வேட்பாளர்களும் மக்களுக்குப் புளித்துப்போன வேட்பாளர்கள். அதே நேரம் அதன் கட்சித் தலைவர் மீதும் மக்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. அவ்வாறிருந்தும் அவர்களுக்கு வழமையான வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றது என்றால் அதுதான் கட்சியின் வாக்காகும்.
எனவே யதார்த்தத்தில் இந்நாட்டில் எங்குமே அ.இ.ம.கா. கட்சி இல்லை. றிஷாட் பதியுதீன் இல்லாவிட்டால் வன்னியில் ஒரு வாக்கும் அ.இ.ம.கா விற்கு கிடைக்காது. அமீரலி இல்லாவிட்டால் மட்டக்களப்பில் ஒரு வாக்கும் கிடைக்காது. ஆனால் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மறைந்தபோதும் மு.கா. இருந்தது. இன்று றவூப் ஹக்கீம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மு.கா இருக்கும். இதனைத் தான் கட்சியின் வளர்ச்சி அல்லது கட்சியின் இருப்பு என்பது.
அம்பாரை மாவட்டத்தில் கட்சியின் இருப்பை, அதன் வளர்ச்சியை முன்னெடுக்கின்ற வேலையை மறைந்த தலைவரின் பாசறையில் பயின்றவர் என்கின்ற அடிப்படையில் வை.எல்.எஸ். ஹமீட் முன்னெடுத்தார்.
அதுதான் எந்தப் பக்கம் சாய்வது என்று தத்தளித்த வாக்காளர்கள் அ.இ.ம.கா சை திரும்பிப் பார்ப்பதற்குக் காரணமாகும். ஆனால் வை.எல்.எஸ். ஹமீடின் பாராளுமன்ற பிரவேசம் தங்களது மவுசை குறைத்துவிடும் என்று பயந்து அவருக்கு காய் வெட்டிவிட்டு அம்பாரை மாவட்டத்தின் 33 ஆயிரம் வாக்காளர்களை நடுத்தெருவில் தவிக்க விட்டு, நன்றி நவிலல் துண்டுப் பிரசுரம் மூலம் கட்சி வளர்த்துவிட முடியாது. இந்த 33 அயிரம் மிதப்பு வாக்காளர்களையும், கட்சி வாக்காளர்களாக மாற்றுவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. அதற்கு அனுபவமுள்ள, பரந்த பார்வையுள்ள ஒருவர் தேவை. வெறுமனே தேசியத் தலைவர் என்று முகநுால்கள் மூலம் பட்டங்கள் சூடிக் கொள்வது இலகுவானதாகும்.
யதார்த்தத்தில் இல்லாத கட்சிக்கு தேசியத் தலைவர் பட்டத்தை தேடுவதற்கு முன்பு கட்சியை கட்டமைக்க வேண்டும். அதற்கு அறிவும் ஆழ்ந்த அனுபவமும் வேண்டும்.
அதேநேரம் தேர்தலில் போட்டியிடுகின்ற நோக்கத்தோடு கட்சியின் கட்டமைப்பு வேலைகளைச் செய்து கொண்டிருந்த வை.எல்.எஸ் சை தேர்தலில் போட்டியிட வேண்டாம் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றுக்கு வாருங்கள் தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்கு பங்களிப்புச் செய்ய ஒருவர் தேவை. அதற்கு பொருத்தமானவர் நீங்களே என்று கட்சித் தலைமை 8 தடவைகளுக்கு மேல் வை.எல்.எஸ் இடம் கூறி போட்டியிடுவதிலிருந்து அவரது மனதை மாற்றிவிட்டு இப்போது சில்லறைக் காரணங்களைக் கூறி அவரை நட்டாற்றில் கைவிட்டதன் மர்மமென்ன ? என்று அவரது ஆதரவாளர்களும், கல்முனை மக்களும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.