GuidePedia


தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ‘ஹார்லே டேவிட்சன்’ என்ற விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளின் ஷோரூம் உள்ளது. அங்கு கடந்த 1–ந் தேதி, ‘டிப் டாப்’ உடையணிந்த வாலிபர் ஒருவர் சென்றார். ரூ.6 லட்சம் மதிப்புள்ள ‘ஸ்ட்ரீட் 750’ மாடல் ஹார்லே டேவிட்சன் பைக்கை வாங்க விரும்புவதாக கூறினார்.

விலை விவரங்கள் பேசி முடிவான பிறகு, அவர் தன்னைப் பற்றிய சுயவிவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்தார். தன் பெயர் சையது தகிர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த பெயரிலான ஓட்டுனர் உரிமத்தையும் காட்டினார்.

பின்னர், பைக்கை ஓட்டிப்பார்க்க விரும்புவதாக கூறினார். அவரது தோற்றத்தையும், பேச்சையும் நம்பி ஏமாந்த கடை ஊழியர்கள், அதற்கு அனுமதி கொடுத்தனர். இருப்பினும், கடை ஊழியர் ஒருவர், அவரை மற்றொரு வாகனத்தில் பின்தொடர்ந்தார்.

ஓட்டிப் பார்ப்பதற்கென்றே உள்ள பிரத்யேக பாதையில் அந்த ‘டிப் டாப்’ வாலிபர், பைக்கை ஓட்டிச் சென்றார். திடீரென பாதை மாறி, வேறு பாதையில் ஓட்டிச் சென்றார். அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர், அவரை துரத்திப் பிடிக்க முயன்றார். ஆனால், முடியவில்லை.

இந்த விவரங்களை கடை ஊழியர், கடை மேலாளரிடம் தெரிவித்தார். இதுபற்றி பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் மேலாளர் புகார் செய்தார். கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், அந்த வாலிபரின் டெலிபோன் பேச்சு பதிவான விவரங்கள் ஆகியவற்றைக் கொண்டு மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் நேற்று முன்தினம் அவரை போலீசார் பிடித்தனர். அவரை கைது செய்து ஐதராபாத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், அந்த வாலிபரின் உண்மையான பெயர் கிரண் (வயது 28) என்றும், சென்னை ஐ.ஐ.டி.யில் முதுகலை பட்டம் பெற்றவர் என்றும் தெரிய வந்தது. மும்பை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் உதவி செயற்பொறியாளராக, ரூ.80 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.

பைக்குடன் நழுவிய அவர், ஐதராபாத் புறநகரில் ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு, மும்பைக்கு தப்பி உள்ளார். 
அவருக்கு விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்கில் நீண்ட தூரம் ஜாலி பயணம் செல்ல வேண்டும் என்று வெறித்தனமான ஆசை. அந்த பைக்கை கடந்த ஆண்டே வாங்க விரும்பினார். ஆனால், அது அவருக்கு ஏற்றதல்ல என்று கூறி, பெற்றோர் தடுத்து விட்டனர். அதனால், பைக் வாங்குவது போல் நடித்து, அதை அவர் திருடிச் சென்று விட்டதாக ஐதராபாத் போலீஸ் துணை கமிஷனர் வெங்கடேஸ்வர் ராவ் தெரிவித்தார்.



 
Top