GuidePedia

தேசிய அரசாங்கத்தில் நியமனம் பெற்று உள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குகின்ற தோரணையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூடகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் புத்திமதி கூறி உள்ளார்.
ஜனாதிபதி பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குகின்றார், இவரிடம் இருந்து பாடம் படிக்க வேண்டிய தேவை இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு உள்ளது, முன்பு அமைச்சரவை அமைச்சராக இருந்து விட்டு இப்போது இராஜாங்க அல்லது பிரதி அமைச்சர்களாக இருப்பது எப்படி? என்று அடம் பிடிப்பவர்கள் மஹிந்த ராஜபக்ஸவிடம் இருந்து படிக்க வேண்டும் என்று இவர்கள் மத்தியில் உரையாற்றியபோது ஜனாதிபதி தெரிவித்து உள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்களாக கடந்த அரசாங்கங்களில் இருந்து இருக்கக் கூடிய பலரும் இராஜாங்க அல்லது பிரதி அமைச்சர்களாக நியமனம் பெற்று இருக்கின்றமை தொடர்பாக பாரிய அதிருப்தி கொண்டிருக்கின்றனர்.
இதே நேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம். பி தேசிய அரசாங்கத்துக்கான ஆதரவை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு வெளிப்படையாகவே வெளிப்படுத்தி உள்ளார். ஜனாதிபதியுடன் அண்மைய நாட்களில் பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டு இருக்கின்றார். இவருக்கும், இ. தொ. காவின் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஒவ்வொரு அமைச்சுப் பதவி சுதந்திர கட்சி தரப்பில் வழங்கப்பட உள்ளது என்று ஊடகங்கள் ஊகங்கள் தெரிவித்து வருகின்றன.
டக்ளஸ் தேவானந்தா எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதி முன்னிலையில் சென்று அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடிய சூழல் உள்ளது, ஆனால் இவருக்கு வழங்கப்பட உள்ள அமைச்சு எத்தகையது? என்பதே பிரச்சினை ஆகும் என்று இவரின் ஆதரவாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.
கடந்த அரசாங்கங்களின் மூத்த அமைச்சர்களில் ஒருவர் டக்ளஸ் தேவானந்தா. அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் பலவற்றையும் அலங்கரித்தவர். அமைச்சர் என்று சொன்னால் இப்போதும் எப்போதும் யாழ்ப்பாண மக்களின் மனங்களில் உடன் வருபவர் இவர் மாத்திரமே. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிற கொள்கையை பற்றுறுதியாக பிடித்துக் கொண்டு மத்திய அரசாங்கத்துடன் எப்போதும் இணக்க அரசியல் நடத்தி வந்திருப்பவர்.
ஆனால் இவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி கொடுக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமிக்ஞை காட்டி இருக்கின்றார். இங்குதான் இணக்க அரசியலில் சிறிய பிணக்கு நேர்ந்து உள்ளது. மிடுக்கை இழக்க டக்ளஸ் தேவானந்தா தயாரில்லை. வெளியில் இருந்து தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு தரவும் தயார் என்று பதிலுக்கு டக்ளஸ் கூறுகின்றார்.
இந்நிலையில்தான் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பூடகமாக மைத்திரிபால சிறிசேனவின் புத்திமதி வெளியில் வந்து உள்ளது.
ஆனால் பொறுத்தார் புவி ஆள்வார் என்பது பழமொழி.




 
Top