GuidePedia

முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரம் மீது இராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்ததில் 107 பேர் துடிதுடித்து பலியாகினர். 230 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கொடூர விபத்து குறித்து அங்குள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், “மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹர விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், நேற்றிரவு மசூதியை சுற்றிலும் ஏராளமான இராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகைக்காக ஏராளமானோர் வந்திருந்தனர்.
அந்த நேரம், பலத்த இடியுடன் மழையும் கடுமையாக பெய்து கொண்டிருந்ததால் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டிருந்தனர்.
அப்போது மூன்றாவது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இராட்சத கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி 107 பேர் துடிதுடித்து பலியாகினர். காயமடைந்த 238 பேர் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கு முன்னதாக கிரேன் இருக்கும் இடத்தில் மின்னல் தாக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. எதிர்பாராத இந்த கொடூர விபத்தால் ஹரமே இரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது.
இந்த விபத்து குறித்து சவுதி அரசு தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. அதே வேளையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், மீட்புப்பணி வேகமாக நடைபெற்று வருகின்றது.
இன்னும் ஓரிரு நாட்களில் ஹஜ் புனித யாத்திரை தொடங்க உள்ளது. இலட்சக்கணக்கானோர் அதில் பங்கேற்க உள்ள நிலையில், மஸ்ஜிதுல் ஹரமில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




 
Top