GuidePedia

பாதுகாப்புக் காரணங்கள் இருந்த போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன் வீட்டிற்கு பாதுகாப்பாக ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற அந்த கட்சியின் 69வது ஆண்டு விழா மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் முடியும் இறுதி தினமான ஜனவரி 5 ஆம் திகதி நான் எம்பிலிப்பிட்டிய, களுத்துறை, மொரட்டுவ உள்ளிட்ட இடங்களில் பல கூட்டங்களில் கலந்து கொண்டு விட்டு, வீட்டுக்கு வந்தேன். அன்றைய தினம் நான் கலந்து கொள்ளும் இறுதியான கூட்டம் மருதனையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஏனைய அனைத்துக் கூட்டங்களிலும் உரை நிகழ்த்தி விட்டு வீட்டுக்கு வந்த என்னை பாதுகாப்பு காரணங்களுக்காக மருதானை கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது என்பதால், பாதுகாவலர்களும், சாரதியும் என்னை வீட்டில் தனிமையில் விட்டுச் சென்றனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்க என்னை தொடர்பு கொண்டு மருதானை கூட்டத்திற்கு நீங்கள் வரும் வரை நாங்கள் காத்திருக்கின்றோம் என்று கூறினார். அப்போது பாதுகாவலர்களும், சாரதியும் இல்லை என்பதால், என்னால், மருதானைக்கு வர முடியாத நிலைமை இருப்பதாக கூறினேன்.
அப்போது எவரும் தேவையில்லை நான் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன் எனக் கூறிய பிரதமர், சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்தார். பிரதமருடன் ரவி கருணாநாயக்கவும் வந்திருந்தார்.
இதனையடுத்து நாங்கள் அனைவரும் மருதானை கூட்டத்திற்கு சென்றோம். மேடைக்கு அழைத்துச் சென்ற ரணில் விக்ரமசிங்க, ஆயிரக்கணக்கான மக்கள் நடுவில் சென்று கைகளை தூக்கி பதில் வழங்கினார்.
எமது கூட்டங்களில் உங்களது உயிருக்கு ஆபத்தில்லை என்பதை உணர்த்தவே ரணில் விக்ரமசிங்க மக்கள் மத்தியில் சென்று தனது கைகளை உயர்த்திக் காட்டினார்.
மக்கள் மத்தியில் சென்று கைகளை உயர்த்தி காட்டிவாறு 20 முதல் 25 வயது இளைஞனை போல் ரணில் விக்ரமசிங்க நடந்து கொண்டார்.
நான் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப் போவது குறித்து நவம்பர் 22 ஆம் திகதிக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எனக்கும் ஒரு நொடி பொழுது பேச்சுவார்த்தை கூட நடந்ததில்லை.
அமைச்சராக நான் நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் ஆசனத்தில் அமர்ந்திருந்த போது இப்போது நாங்கள் செல்வோம் என ரணில் விக்ரமசிங்க சைகை காட்டினார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டுக்கே நாங்கள் செல்லவிருந்தோம். ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான பேச்சுவார்த்தை என அவர் கூறினார்.
இதனடிப்படையில் நானும், ரணில் விக்ரமசிங்கவும் வாகனங்களில் ஏறி நாடாளுமன்றத்தின் முன்பாக உள்ள குளத்தை கடக்கும் போது, ஹெலிகப்டர் ஒன்று நாடாளுமன்றத்தில் தரையிறங்கியது. சில வினாடிகள் தாமதித்திருந்தால், அதில் வந்தவர் எனது பயணத்தை தடுத்திருப்பார்.
அத்துடன் சில மணிநேரம் தாமதமாகியிருந்தாலும் அன்று எடுத்திருந்த தீர்மானத்திற்கு அமைய எமது பயணத்தை தொடர்ந்திருப்போம். அதனை தடுக்க எவராலும் முடிந்திருக்காது.
என்னை ஜனாதிபதி ஆக்கியதில் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியினர் வழங்கிய உதவி எனது மனதில் என்றும் நிலைத்திருக்கும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.



 
Top