GuidePedia

நான்கு அமைச்சுப் பதவிகளுக்காக எட்டு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட பதினைந்து அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகளில் மேலும் நான்கு பதவிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
எனினும், இந்தப் பதவிகளுக்காக எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதனால் சர்ச்சை உருவாகியுள்ளது.
அமைச்சுப் பதவிகளுக்காக ஏ.எச்.எம். பௌசீ, பைசர் முஸ்தபா, விஜித் விஜயமுனி சொய்சா, சரத் அமுனுகம, ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் அபேவர்தன யாப்பா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இந்த பெயர்ப் பட்டியலில் சிலருக்கு பதவி வழங்குவதில் வேறும் சர்ச்சைகளும் காணப்படுவதாக கட்சி உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் சிலருக்கு பதவி வழங்குவதனை எதிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டமைப்பின் பட்டியலில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதனால் பெசீயை விடவும் முஸ்தபாவிற்கு அதிகளவு சந்தர்ப்பம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் அமைச்சராக தெரிவு செய்யப்படுவதனை வடக்கின் பிரதான தமிழ் அரசியல் கட்சியொன்று எதிர்த்து வருகின்றது.
ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதனை தொழிலாளர் தேசிய காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி அகியன எதிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கூட்டமைப்பின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரும் அமைச்சுப் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அவருக்கு எதிராக பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதனால் அவருக்கு பதவி வழங்குவதிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும் வெற்றிடமாகியுள்ள அமைச்சுப் பதவிகளுக்காக நாளை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.



 
Top