GuidePedia

(எம்.எஸ். பாஹிம்)
இரு பாதாள ஆயுத குழுக்களுக் கிடையிலான மோதல் காரணமாகவே கொட்டாஞ்சேனை புளுமெண்டல் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக விசாரணை மூலம் புலனாகியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு அரசியல் தொடர்பு எதுவும் கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சிறையிலுள்ள தெமடகொட சமிந்த என்பவரே இந்த கொலையை பின்னணியில் இருந்து வழிநடத்தியுள்ள தோடு சம்பவம் தொடர்பில் 16 பேர் கைதாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருவர் கொலையாகி 11 பேர் காயமடைவதற்கு காரணமான சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 21 ரவைகள் என்பன கொலைக்கு பயன்படுத்திய வாகனச் சாரதியிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இரு பாதாள உலகத்தினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட போதும் தவறுதலாக வேறு இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஜுலை 31 ஆம் திகதி இடம்பெற்ற புளுமெண்டல் கொலை சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட ஊடக மாநாடு நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,
இந்த கொலைச் சம்பவம் நடைபெற்ற அதே தினத்தில் இது குறித்து விசாரணை சி.ஐ.டி.க்கு ஒப்படைக்கப்பட்டது.
முதலில் புளுமெண்டல் வீட்டுத்திட்ட பகுதியில் கொலையாளிகள் பயணித்த கார் மீட்கப்பட்டது.
இதுவரை 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்செய் யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளனர். ஏனைய 8 பிரதான சந்தேக நபர்களும் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
முன்பு ஒன்றாக செயற்பட்ட இரு ஆயுதக்குழுக்கள் தற்பொழுது பிரிந்து செயற்படும் நிலையிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. தெமடகொட சமிந்த வழி நடத்தும் குழுவே மற்றைய தரப்பு குழுவை சுட்டுள்ளது.
இவர் சிறையிலிருந்து இதனை வழிநடத்தியுள்ளார். மறு தரப்பை சேர்ந்த ஆமி சம்பத் மற்றும் சங்க ஆகியோர் புளுமெண்டல் கூட்டத்தில் இருந்துள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபரான தெமடகொட சமிந்தவை தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் சி.ஐ.டி. விசாரணைகளுக்குட்படுத்த இருக்கிறோம்.
சி.ஐ.டி. விசாரணையை அடுத்து கொலைக்குப் பயன்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த சமீர ரசாங்க (சுது) உடவளவ பகுதியில் வைத்து அண்மையில் கைதானார். இவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, 21 ரவைகள் மற்றும் மெகசின் என்பன மீட்கப்பட்டன. இவருடன் கொலை செய்வதற்கான வாகனத்தில் வந்த மூவர் கைதானார்கள்.
இதில் ஜூட் என்பவர் கொள்ளுப் பிட்டியில் கைதானதோடு இவரிடம் இருந்து ரிவோல்வர் ஒன்றும் 5 ரவைகளும் மீட்கப்பட்டன. சிரிவர்தன (ஆப்தீன் ஜகத்) என்பவர் நீர்கொழும்பில் கைதான தோடு இவரிடம் இருந்து தன்னியக்க துப்பாக்கியொன்றும் 8 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. ருவன் பண்டார (நேவி நுவன்) எனும் சந்தேக நபர் ரத்மலானையில் பிடிப்பட்டார்.
கொலை வழக்குகளில் சந்தேக நபர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்ற ஆரம்ப விசாரணையின் பின்னர் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும். சட்டமா அதிபருக்கு நேரடியாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியும். இந்த வழக்கையும் நேர டியாக மேல் நீதிமன்றத்தில் விசாரிக்குமாறு கோர இருக்கிறோம்.
தேர்தல் கூட்டம் நடந்த இடத்தில் இருந்த இரு பாதாள உலகத்தினரும் கைதாக வில்லை. இந்த சம்பவத்துடன் அரசியல் தொடர்பு எதுவும் கிடையாது. பாரத லக்ஷ்மன் கொலையுடன் தொடர்புள்ள வர்களும் இந்த சம்பவத்தில் கைதானவர் களிடையே அடங்குகின்றனர். ஆமி சம்பத் போலி கடவுச்சீட்டில் இங்கு வந்த வராகும்.
தேர்தலில் பாதாள உலகத்தினர் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப் பட்டது இதனையடுத்து பொலிஸ் மா அதிபர் விசேட விசாரணை நடத்தியதோடு அதிரடிப்படையினரையும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தினார். ஆனால் இந்த சம்பவத்தில் மட்டுமே ஆயுத குழுக்கள் தொடர்புபட்டுள்ளன என்றார்.




 
Top