GuidePedia

கடந்த காலத்தில் சிறுபான்மை சமூகம் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட புறக்கணிப்புக்கள், ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அநீதிகள் என்பவற்றின் பாரதூரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நன்கு அறிவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தெரிவித்துள்ளார்.

எட்டாவது பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது;  
புண்படுத்தப்படடு பாதிப்புக்குள்ளான ஒருவராலேயே, புண்படுகின்ற அல்லது பாதிக்கப்படுகின்ற ஒருவரின் வலியின் பாரதூரத்தை உணர்வுபூர்வமாக அறிய முடியும். அந்தவகையில் கடந்த காலத்தில் சிறுபான்மை சமூகம் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட புறக்கணிப்புக்கள், ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அநீதிகள் என்பவற்றின் பாரதூரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நன்கு அறிந்திருந்தவர்.
இந்த நிலையில் வடமாகாணத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு பலவந்தமாக முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதன்பிறகு புத்தளம் மற்றும் குருநாகள் போன்ற நாட்டின் நாலாபுறத்திலும் 23வருடகாலம் அகதி முகாம்களில் சொல்லணாத் துன்பங்களை அனுபவித்து வந்தனர்.
சமாதானச் சூழ்நிலையில் அதாவது 2010ஆம் ஆண்டிற்குப்பிறகு முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்கு சட்டபூர்வமாக அனுமதியை வழங்கிய போதிலும் இதுவரை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் பல தடைகளும் தடங்கள்களுமே ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக, வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்தபோதிலும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அன்றுதொட்டு இன்றுவரை எட்டாக்கனியாகவே உள்ளது.  

ஆனால் இன்று நல்லாட்சி அரசு என்று சொல்லப்படுகின்ற இந்த அரசில் வடமாகாணத்தின் முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், எதிர்கட்சித்தலைமைப் பதவி, மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைமைப் பதவி அனைத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் வடமாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அவர்களது அபிலாசைகள், தேவைகள், மீள்குடியேற்றம் என்பவற்றை பாரிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்காகவும், தேவைக்காகவும் குரல் கொடுக்கின்ற கட்சியாகக் கடந்த காலத்தில் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் செயற்பட்டு வந்தது. ஆனால் வடபுலத்தில் அரசியல்  அதிகாரத்தில் அநாதைகளாக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களும், தாங்களும் தமிழ் பேசும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் என்ற வகையில், எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தயவை நாடி பாரிய எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர். 

எனவே எதிர்கட்சி தலைமைத்துவம் கிடைக்கப்பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைமைத்துவமும்  வட மாகாண முதலமைச்சர், ஏனைய மாகாண அமைச்சுக்கள், கிடைக்கப் பெற்றிருக்கின்ற மாவட்ட அபிவிருத்திக் குழு பதவியை வைத்து சிறுபான்மையாக வாழ்கின்ற, சொந்தமண்ணில் மீள்குடியேரத் தவிக்கும் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் செயற்படுவார்கள் என்ற பாரிய எதிர்பார்ப்புடன் வடபுல மஸ்லிம்கள் உள்ளனர் என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

(றிப்கான் கே. சமான்)





 
Top