உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை இந்தியாவின் புதுடில்லி நோக்கி பயணமாகின்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ரணில் விக்கிரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திரமோடி, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவுக்கும் இலங்கை்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், பிராந்தியத்தின் சமாதானம், மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது குறித்தும் மிகவும் விரிவான முறையில் ஆராயப்படவுள்ளது.
அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடனான சந்திப்பின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறைக்கு ஆதரவு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் விடயம் குறித்தும் இரண்டு நாடுகளுக்கிடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பாகவும் இலங்கை பிரதமரும், இந்தியப் பிரதமரும் கலந்துரையாடவுள்ளனர்.
அதாவது இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையிலான முக்கிய நான்கு விடயங்கள் தொடர்பாக இலங்கை இந்திய பிரதமர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அவதானத்துக்குட்பட்டுள்ள சீபா உடன்படிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது கலந்துரையாடப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அத்ததவுத ஹெட்டி, இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ள எசல வீரகோன் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.
மேலும் ஜெனிவா சென்றுள்ள வெளிவிகவார அமைச்சர் மங்கள சமரவீர திங்கட்கிழமை இரவு ஜெனிவாவிலிருந்து நேரடியாக புதுடில்லிக்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளி விஜயமாக இந்திய விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.