தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் நேற்று கடும் இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வீரவன்ச தெரிவிக்கையில்,
திருடர்கள் என மாறி, மாறி திட்டிக்கொண்டவர்கள், 17 ஆம் திகதிக்கு பின்னர் 18 ஆம், 19 ஆம் திகதிகள் இரண்டு திருடர்களின் நிலைப்பாடுகளில் ஏதோ மாற்றம் ஏற்பட்டு, இரு திருடர்களும் இணைந்து நாட்டில் முக்கிய பிரச்சினையை தீர்ப்போம் என்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகம் எனக் கூறியவர்கள், தேசிய நிதி விரயமாகிறது என்று கூறி அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றவர்கள்.
25 பேரை கொண்ட அமைச்சரவையை ஏற்படுத்த போவதாக கூறியவர்கள் தற்போது அரசியலமைப்புக்கு விரோதமாக செயற்பட முயற்சித்து வருகின்றனர்.
தேசிய அரசாங்கம் என்ற ஒன்று ஏற்படவில்லை. அது வெறும் பெயர் பலகை மாத்திரமே. அமைந்துள்ள அரசாங்கம் கூட்டணி அரசாங்கம்.
இந்த கூட்டணி அரசாங்கத்திற்கு தேவையான அளவில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ள இன்று நாடாளுமன்றத்தில் அனுமதியை கோர போகின்றனர்.
இதனை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது. 17 ஆம் திகதி வரை அங்குள்ளவர்களை திருடர்கள் என்றும் இங்குள்ளவர்களை திருடர்கள் என்றும் பேசிக் கொண்டனர்.
இந்த பக்கம் திருடர்கள் இருக்கவே இல்லை என்று அந்த பக்கம் உள்ளவர்களும் அந்த பக்கம் திறைசேரி வங்கி பிணை முறி திருடர்கள் இருந்ததே இல்லை என்று இந்த பக்கம் இருப்பவர்களும் கூறவேண்டும். அப்படியொன்றால் கடந்த காலங்களில் தேசிய நிதி நல்லபடியாக பாதுகாக்கப்பட்டுள்ளது.
முதலில் இரண்டு தரப்பினரும் நாங்கள் திருடர்கள் இல்லை. நாங்கள் தூய்மையானவர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள்.
தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு செல்ல ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.
தேர்தல் விஞ்ஞாபனத்தை பாருங்கள் அதுதான் சட்டரீதியான ஆவணம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
ஒரு பிரச்சார மேடையில் உரையாற்றவில்லை. அவர் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்கள் கிடைப்பை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இதனால், அவர் கூறியதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மக்கள் ஆணையுடன் முடிச்சு போட வேண்டாம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய அரசாங்கம் என்ற ஒரு வார்த்தை இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் ஒன்றை அமைக்கவே மக்கள் வாக்களித்தனர்.
தற்போது மக்களின் ஆணையை தலைகீழாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். நாட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் அமைச்சு பதவியை பெறாமல் அதனை செய்வோமே… நல்லவற்றை கொண்டு வர எமக்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை. நாங்கள் ஆதரவு வழங்குகிறோம்.
அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு நாங்கள் 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை. நாட்டிற்கு நல்ல நடக்கும் என்றால், அமைச்சு பதவிகள் தேவையில்லை. அமைச்சர் பதவிகள் இல்லாமலேயே நாங்கள் ஆதரவு வழங்குவோம்.
தேசிய அரசாங்கம் அமைந்தால், நாட்டின் கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும் என இவர்கள் எண்ணுகின்றனர்.
ராஜித சேனாரத்ன தனது உரையில் தேசிய அரசாங்கத்தின் திட்டத்தை தெளிவாக தெரிவித்தார். ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்ய உதவி, இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேலையை செய்தார்.
அவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். எதிர்க்கட்சியில் அமரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்ய சந்தர்ப்பத்தை வழங்குவதாக மைத்திரிபால சிறிசேன எங்களிடம் கூறினார்.
இதனடிப்படையில் 56 பேர் கையெழுத்திட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்தோம். சிரித்து அதனை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, சிரேஷ்ட உறுப்பினர்களிடம் பேசி விட்டு மாலை அறிவிப்பதாக கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்நன்றியை நிறைவேற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க தேர்தல் செயற்பாடுகளை குழப்பினார்.
அடுத்ததாக சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அக்கறை காட்டாத நிலைக்கு மாற்றினார். அடுத்ததாக தனக்கு உதவிய ஜே.வி.பிக்கு எதிர்க்கட்சி அமைப்பாளர் பதவியை கிடைக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பாடுகளை முன்னெடுப்பார்.
ஜனவரி 8 ஆம் திகதிக்கு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலே தற்போது செயற்படுத்தப்படுகிறது.
அதிகாரத்தை பரவலாக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற இனவாத குழுக்களுக்கு வழியை திறந்து விடவே போகின்றனர். சமஷ்டி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதுதான் நிகழ்ச்சி நிரல் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள ஒப்பந்தம்.
வெளிநாட்டு தூதரகத்தின் விருப்பத்திற்குபு அமைய தேசியப்பட்டிலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். 27 ஆயிரம் பேர் உயிர் தியாகம் செய்து காப்பற்றிய நாட்டை இப்படி காட்டிக்கொடுக்க நாங்கள் உங்களுக்கு இடமளிக்க போவதில்லை.
நீங்கள் எங்களை சிறையில் அடைப்பீ்ர்கள், எந்த நடவடிக்கையும் எடுப்பீர்கள், உயிரிழந்த 27 ஆயிரம் பேர் மீது சந்தியம் செய்து கூறுகிறேன். இந்த காட்டிக் கொடுப்புக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவேன். காட்டி கொடுப்பின் செயற்பாடுகளை மறுபக்கம் நோக்கி திருப்புவோம்.
நீங்கள் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொடுத்துள்ளீர்கள், இன்னும் சிறிது நாளில் ஜெனிவா அறிக்கை வெளி வரவுள்ளது. அந்த அறிக்கை வெளியான பின்னர் அறிக்கையை அங்கீகரிக்க உதவி பெற சம்பந்தன் உலகம் முழுவதும் செல்வார்.
தேசிய விசாரணை நடத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள், தேசிய விசாரணையிலும் அவர்களுக்கு தேவையானதை நீங்கள் செய்து கொடுப்பீர்கள்.
இதுதான் உங்களின் நிகழ்ச்சி நிரல். அமெரிக்காவுக்கு ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் தேவையான வகையிலேயே தேசிய விசாரணை நடைபெறும்.
ஜெனிவா அறிக்கைக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. மிகவும் துயரமான வகையில் இந்த பாரிய காட்டிக்கொடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் விலக்கப்படுவார்கள் என அச்சுறுத்தப்படுகின்றனர்.
சர்வாதிகார ஆட்சி எனக் கூறப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இவ்வாறு நடந்ததா, எதிர்க்கட்சியாக செயற்பட இடையூறுகள் இருக்கவில்லை.
சுயாதீன செயற்பட அனுமதித்தார். எதிர்க்கட்சியின் பணியை செய்ய எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
