சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் தமிழ் அரசியல் தலைமைகளுடன் காலத்துக்கு காலம் செய்து கொண்ட ஒப்பந்தங்களை கிழித்தெறிந்தன என்பது கடந்த கால வரலாறு ஆகும்.
இதற்கு டட்லி - செல்வா ஒப்பந்தம், பண்டா - செல்வா ஒப்பந்தம் என்பன வெளிப்படையான சான்றுகள்.
மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்ற சுதந்திர கட்சி அரசாங்கமும் சரி, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி தமிழர் தரப்புக்கு எழுத்தில் வழங்கி இருக்கக் கூடிய உத்தரவாதங்கள், உறுதிமொழிகள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதை தவிர்க்கவே செய்து வந்திருக்கின்றன.
இதனால்தான் தமிழ் மக்களை கடவுள்தான் இனிமேல் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா ஒரு கட்டத்தில் சொன்னார். தமிழர் உரிமைக்கான போர் வெடித்தது. ஆரம்பத்தில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் உரிமைக்கான போர் இடம்பெற்றது. தமிழர் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க பல தீவிரவாத இயக்கங்களும் தோற்றம் பெற்றன. இளையோர்கள் இந்த இயக்கங்களில் சாரை சாரையாக இணைந்து கொண்டனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆட்சிக்கு மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களுடன் இணக்க அரசியல் செய்து வருகின்றார். இதனால் இவர் தமிழின துரோகியாக இன்று வரை சித்திரிக்கப்படுகின்றார். இவருக்கு முன்னர் இணக்க அரசியல் செய்த யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா புலிகளால் துரோகி முத்திரை குத்தப்பட்டு சுடப்பட்டார். இதே போல லக்ஷ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றோர் உட்பட ஏராளம் தமிழ் புத்திஜீவிகள் பேரினவாத அரசாங்கங்களுடன் ஒட்டி நின்று செயற்பட்டதால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பில் மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள பேரினவாத அரசாங்கங்களுடன் நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே இப்போது வரை எதிர்ப்பு அரசியல் செய்து வருகின்றது. அத்துடன் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை ஒட்டுக் குழு என்றும் எட்டப்பன் கூட்டம் என்று குற்றம் காண்கின்றது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு வக்காளத்து வாங்குகின்ற வக்கீலாக அவதாரம் எடுத்து உள்ளமைதான் அரசியல் அவதானிகளை மாத்திரம் அன்றி ஊடகவியலாளர்களையும் பேரதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
கொண்டு வரப்பட உள்ள தேர்தல் திருத்தம் சிறுபான்மை கட்சிகள் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து கலந்து ஆராய்கின்ற கூட்டம் ஒன்று கொழும்பில் இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி சுமந்திரன் பிரசன்னமானார். ஆனால் இவர் ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி ஆகியவற்றின் பிரதிநிதியாக, அரசாங்கத்தின் பேச்சாளர் போல இங்கு நடந்து கொண்டார்.
தேர்தல் திருத்தம் தொடர்பாக அரசாங்கத்துக்கு ஒரு குரலில் ஆட்சேபனைகளை முன் வைக்க சிறுபான்மை கட்சிகள் முதலில் இணக்கத்துக்கு வர வேண்டும் என்று இக்கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது. கட்சிகளின் பிரதிநிதிகளில் வேறு எவரும் இதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால் சுமந்திரன் மாத்திரம் இதை கடுமையாக ஆட்சேபித்தார். இதற்கு இவர் சொன்ன காரணம் வேடிக்கையானதாக மாத்திரம் அன்றி போலியானதாகவும் தோன்றியது.
அதாவது இத்தேர்தல் திருத்தம் சிறுபான்மை கட்சிகளை பாதிக்காத வகையிலேயே அமையும் என்று இவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாய்மூல உறுதிமொழி கொடுத்து உள்ளனராம். இவ்விடயத்தில் இருவரையும் நம்புகின்றாராம். நம்பலாமாம். எனவே இப்போதைக்கு சிறுபான்மை கட்சிகள் ஒரு குரலில் ஆட்சேபனைகளை முன்வைக்க கூடாது, அது கூடாது என்று சுமந்திரன் வாதாடினார்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. எழுத்து மூல ஒப்பந்தங்களை கிழித்தெறிந்த பேரினவாத கட்சிகளின் வாய் மூல உறுதிமொழியை பூரணமாக நம்பலாம் என்று சுமந்திரன் சிபாரிசு செய்தமை இவர் யாரின் ஆள்? என்பதை காட்டிக் கொடுத்தன.
அட்டகாசன்
