GuidePedia

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதின் எதிரொலியாக, சென்னையில் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். 

சென்னையில் நிலநடுக்கம்

நேபாள நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் வடமாநிலங்கள் சிலவும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்திலும் நேற்று பரவலாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. 

தலைநகர் சென்னையில் கோடம்பாக்கம், மயிலாப்பூர், வடபழனி, கூடுவாஞ்சேரி, நந்தனம், அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இவை ‘வாட்ஸ்-அப்’ மூலம் சென்னையில் நேற்று வேகமாகவும் பரவியது. 

அசைந்த கட்டிடம்?

இதனால் சென்னையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பீதியின் காரணமாக கட்டிடத்துக்கு வெளியே திறந்தவெளிக்கு வந்தனர். சிலர் பெரிய அளவில் நிலநடுக்கம் வரலாம் என்ற அச்சத்தில் நீண்ட நேரம் வீட்டுக்கு திரும்பாமல் வெளியே காத்திருந்தனர். 

சிலர் நிலநடுக்கத்தை தாங்கள் உணர்ந்ததாக கூறியதால் மேலும் பீதி ஏற்பட்டது. சென்னை கோடம்பாக்கத்தில் 8 மாடி கட்டிடம் ஒன்று அசைந்ததாகவும், கட்டிடத்தின் உள்ளே இருந்த பொருட்கள் நகர்ந்ததாகவும் பரபரப்பாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த கட்டிடத்துக்கு வெளியே நீண்ட நேரம் ஊழியர்கள் காத்திருந்ததையும் காண முடிந்தது. 

ஊழியர்கள் அச்சம்

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி எதிரே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சில தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் நேற்று பகலில் இந்த கட்டிடத்தில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அங்கிருந்த ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு அவசர அவசரமாக விடுமுறை அளிக்கப்பட்டது. 

இதேபோல, சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்பட்டதால், பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது. 

லேசான நிலநடுக்கம்

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் (நில அதிர்வு) மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. வடமாநிலங்களில் அதன் தாக்கம் இருந்ததாகவும், தமிழகத்தில் தலைநகர் சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் பலர் எங்களிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். 

சென்னையில் மிக குறைவான அளவில்தான் நிலஅதிர்வு பதிவானது. சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பொதுமக்களால் உணரப்பட்டது. இதனால் அவர்கள், தங்களுடைய குடியிருப்புகளில் இருந்தும், வர்த்தக நிறுவனங்களில் இருந்தும் உடனடியாக வெளியேறி திறந்த வெளிப்பகுதிக்கு வந்துள்ளனர். பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்படவில்லை.

மெட்ரோ ரெயில் பணியால்…

இதற்கு காரணம் நில நடுக்கம் ஏற்பட்ட நேபாள நாட்டில் இருந்து சென்னை நகரம் வெகு தொலைவில் அமைந்திருப்பதுதான். எனினும், ரிக்டர் அளவு 5-க்கும் மேல் இருந்தால்தான் பொதுமக்களால் நில அதிர்வின் தாக்கத்தை நன்கு உணர முடியும்.

நந்தனத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் அசைந்ததாக தகவல் வந்துள்ளது. ஆனால் அசைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட கட்டிடத்துக்கு அருகே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே இந்த அதிர்வு நிலநடுக்க பீதியை ஏற்படுத்தி இருக்கலாம். 

இவ்வாறு அவர் கூறினார். 

பெற்றோர்கள் அச்சம்

சென்னையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட தகவல் காட்டுத்தீ போல தமிழகம் முழுவதும் பரவியது. இதனால் சென்னையில் வேலை பார்க்கும், படிக்கும் தங்களது பிள்ளைகளை நினைத்து அவர்களது பெற்றோர்களுக்கு ஒரு வித அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர்கள் அவர்களுக்கு போன் செய்து நலம் விசாரித்தனர். 

மேலும், பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த உறவினர்கள் மற்றும் சொந்த பந்தத்தினருக்கும் போன்செய்து அவர்களது நலத்தையும் உறுதி செய்தனர். 

சென்னையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் நேற்று தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. 



 
Top