நேபாள நாட்டில் மிகவும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவின் மேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு சனிக்கிழமையன்று முற்பகல் 11.44 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 அலகுகளாகப் பதிவாகி இருந்தது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலநடுக்கத்தால் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து விழுந்து மண்ணோடு மண்ணாக புதைந்தன. காத்மண்டு நகரமெங்கும் புழுதிப் படலமாகத்தான் இருந்தன. சாலைகள் பாளம் பாளமாக வெடித்து கிடந்தன.. காத்மண்டுவில் புகழ்பெற்ற 9 மாடி தரகா டவர், பதானில் தர்பார் ஸ்கொயர் ஆகியவை தரைமட்டமாகிப் போகின. இந்த நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் தாண்டும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் காத்மண்டு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. நேபாளம் முழுவதும் செல்போன் சேவை முடங்கிப் போனது. நிலநடுக்கத்தால் படுகாயமடைந்த பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பலமுறை ஏற்பட்ட நிலநடுக்க பின் அதிர்வுகளால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
1934ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தில் காத்மண்டு நகரம் பேரழிவை சந்தித்தது. 80 ஆண்டுகளுக்குப் பிந்தைய இந் நிலநடுக்கத்தால் அண்டை நாடான இந்தியாவின் டெல்லி உட்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.