ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த விசேட பிரிவொன்றை அரசாங்கம் உருவாக்கவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் அரசாங்கம் முன்னதாகவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஒன்றை நியமித்துள்ளது.
எனினும் இதற்கு மேலதிகமாக மற்றுமொரு பிரிவு ஒன்றையும் நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாரியளவிலான மோசடிகள், குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இந்தப் பிரிவு உருவாக்கப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் பல்வேறு வழிகளில் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாரியளவு மோசடிகள் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு இந்த ஆண்டுக்குள் நிறுவப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் விசேட பிரிவு உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். யாரை கைது செய்ய வேண்டுமென பொலிஸாரினை அரசாங்கம் வழிநடத்துவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.