GuidePedia

நேபாளத்துக்கு உதவிப் பொருட்களையும், மீட்பு அணியொன்றையும் ஏற்றிச் சென்ற இலங்கை விமானப்படையின் சி-130 விமானம், காத்மண்டுவில் இருந்து 33 மாணவர்களுடன் இன்று கட்டுநாயக்கவுக்குத் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலஅதிர்வினால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவுவதற்காக, 44 இலங்கை இராணுவத்தினர் மற்றும், 4 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் உதவிப் பொருட்களை ஏற்றிய சிறிலங்கா விமானப்படை விமானம், நேற்று அதிகாலை 5.30 மணியளவில், கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
நேற்று மதியம் அந்த விமானம் காத்மண்டுவைச் சென்றடைந்தது.
எனினும், அந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக உடனடியாக மீளத் திரும்ப முடியவில்லை.
இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர், இன்று அதிகாலையில், அந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என்று நேற்றிரவு வெளிவிவாகார அமைச்சின் அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.
இந்த விமானத்தில், நேபாளத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட சிறிலங்காவின் பெண்கள் உதைபந்தாட்ட அணியைச் சேர்ந்த 23 பேர் உள்ளிட்ட 33 பேர் சிறிலங்காவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.எஞ்சிய 10 பேரும் நேபாளத்தில் பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களாவர்.
இதற்கிடையே நேற்று அதிகாலையில் புறப்பட்டுச் சென்ற, 4 மோப்ப நாள்களை உள்ளடக்கிய இராணுவ மீட்புக்குழு அங்கு பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில், இரண்டாவது மீட்புக்குழு இன்று காலையில் காத்மண்டு புறப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்தக் குழுவில் இரண்டு மோப்ப நாய்களும், 50 இலங்கை இராணுவத்தினரும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, உதவிப் பொருட்களும், மீட்புப் பொருட்களும் தயாரக வைக்கப்பட்டுள்ளன.
nepal-rescue-team (1)
nepal-rescue-team (2)
nepal-rescue-team (3)




 
Top