(க.கிஷாந்தன்)
சொந்த வசிப்பிடமின்றி , முகவரியற்று லயன் வீடுகளில் வாழ்ந்து வரும் பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் புதிய நல்லாட்சி அரசின் வேலைத்திட்டத்தின் கீழ்,தோட்டத் தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு ஏழு பேர்ச் காணியுடனான உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை பண்டாரவளை மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதத்தின் முயற்சியின் பேரில் அவரது தலைமையிலேயே நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோட்டத் தொழிலாளர் குடும்பத்துக்கான முதலாவது காணி உறுதிப்பத்திரத்தை வழங்கினார்.
தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு முகவரியைப் பெற்றுக் கொடுத்தல் எனும் தொனிப்பொருளில் குடும்பம் ஒன்றுக்கு ஏழு பேர்ச் காணி உறுதியை வழங்கும் ஆரம்ப நிகழ்வாகவே பண்டாரவளையில் இடம்பெற்றதாக பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மலையகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படுவதுடன் தோட்டத் தொழிலாளர்களாகிய ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏழு பேர்ச் காணியுடனான உறுதியும் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
உறுதிப் பத்திரங்களில் குடும்பமொன்றின் கணவன் மனைவி என்ற இருவரையும் சம நிலைப்படுத்திய வகையில் உத்தரவாதப்படுத்தி சட்டபூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வழங்கப்படும் இக்காணி எவ்வகையிலும் வெளியாருக்கு விற்பனை செய்யமுடியாத வகையில் அமைந்துள்ளது.
ஆயினும் காணியின் கட்டிடங்கள் எதுவும் நிருமானிப்பதற்கு வழங்கப்படும் காணி உறுதிப்பத்திரத்தை வங்கியில் வைத்து கணவனும் மனைவியும் இணைந்த வகையில் கடன்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் அமைச்சர்களான பி.திகாம்பரம், வி.இராதாகிருஸ்ணன், லக்ஸ்மன் கிரியெல்ல, ஊவா முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, தமிழ்க்கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ், உறுப்பினர் வே.ருத்திரதீபன், முன்னாள் ஊவா மாகாண உறுப்பினர் அ.அரவிந்தகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
இதன்போது தோட்டத்தொழிலாளரின் 200 வருட வரலாற்றை ஞாபகப்படுத்தும் ஆவணப்படமும் காண்பிக்கப்பட்டது.