GuidePedia

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில் பல ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று 19வது திருத்தம் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில், உரையாற்றிய அவர், ஜப்பானுக்கான தூதுவராகப் பணியாற்றிய அட்மிரல் கரன்னகொட, பொய் கூறுவதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக, இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு அனுப்பி வைக்கப்பட்ட படையினரே சிறிலங்கா படையினர் வெளிநாடு ஒன்றில் மேற்கொண்ட முதலாவது அனர்த்த மீட்புப் பணி என்று கூறி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையை தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
அட்மிரல் கரன்னகொட ஜப்பானுக்கான தூதுவராக இருந்த போது, அங்கு ஏற்பட்ட சுனாமியை அடுத்து ஜப்பானுக்கு சிறிலங்கா படையினரை மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்தக் குழு ஜப்பானுக்கு பயணிகள் விமானத்திலேயே அனுப்பி வைக்கப்பட்டதே தவிர. இராணுவ விமானத்தில் அல்ல. நேபாளத்துக்கு இராணுவ விமானத்திலேயே இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜப்பானுக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தது குறித்து ஏன் கரன்னகொட உரிமை கோருகிறார் என்று தெரியவில்லை.
அவர் ஒன்றும் செய்யவில்லை. கரன்னகொட கூறிய பல பொய்களுக்கான சான்றுகள் உள்ளன. எல்லாமே விரைவில் வெளிவரும்” என்று பதிலளித்துள்ளார்.



 
Top