(க.கிஷாந்தன்)
மலையக பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் பொதுமக்கள் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் டயகம வைத்தியசாலை பல வருடகாலமாக எவ்வித வசதிகள் இன்மையால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் பல இடர்களை சந்திப்பதாக இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வைத்தியசாலை தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்தது 1992 ம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் மயமாக்கப்பட்டது. தற்போது இவ்வைத்தியசாலையில் அதிகமான குறைப்பாடுகள் நிலவுகின்றது. இப்பகுதியில் உள்ள 30 தோட்டங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கு மேறப்பட்ட மக்கள் இவ்வைத்தியசாலையை பயன் படுத்துகின்றனர்.
இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையில் இருப்பதால் சிகிச்சை பெற செல்லும் நோயாளர்கள் பல மணி நேரம் காத்திருக்கவேண்டிய துர்பாக்கிய நிலை தொடர்கின்றது. வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு கட்டில் விரிப்பு இல்லை அத்தோடு இரவு வேலையில் நுளம்பு தொல்லையால் நிம்மதியாக நித்திரைக்கொள்ள முடியாத சூழ் நிலைக்காணப்படுவதாக வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை வைத்தியசாலையில் மிகவும் குறைந்த ஊழியர்கள் சேவையில் இருப்பதால் உரிய நேரத்தில் சேவைகள் நடைபெறுவதில்லையென தெரியவருகின்றது. மேலும் இங்குள்ள பிரேத அரை 4 அடி அகலமும் 6 அடி நீளம் கொண்டதாகும் இதனால் இறப்பவர்களின் உடலை வைக்கமுடியாத நிலைக்காணப்படுவதோடு ஒருவர் அல்லது இருவர் இறக்கும் போது உடலை வைப்பதில் சிரமங்கள் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
அத்தோடு வெளி நோயாளர் பிரிவில் மருந்துக் கொடுக்கும் அதிகாரி ஒருவர் கடந்த ஆறுமாதகாலமாக இன்மையால் பெறும் சிரமம் தோன்றியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இப்பகுதியில் உள்ள 200ற்கும் மேற்ப்பட்ட மக்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தனர். வைத்திய அதிகாரியால் அனைத்து நோயாளர்களையும் பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும் நோயாளர்களுக்கு மருந்துகள் வழங்கப்படவில்லை காரணம் மருந்துகள் வழங்கும் அதிகாரி இல்லை. இதனால் வைத்தியசாலை நிர்வாகத்தால் பாமசியில் மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தனர். இதனால் காலையிலிருந்து பிற்பகல் ஒரு மணிவரை நோயாளர்கள் வேதனையுடன் காத்திருந்ததுடன் சிலர் நோயை தாங்கிக் கொள்ளமுடியாமல் மயங்கிகிடந்தனர். இன்னும் சிலர் பசியுடன் இருந்ததுடன் போக்குவரத்துக்கு பணம் இல்லாமல் தடுமாரி நின்றனர். அத்தோடு பணம் இல்லாமல் கடைகளில் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு திரும்பி சென்றனர்.
வைத்தியசாலையை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாத காரணத்தினால் இரவு நேரங்களில் நாய்களின் தொல்லையினால் நோயாளர்கள் சிரமபடுகின்றனர். இங்கு காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பாக இப்பிரதேச மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில்
திரு. சன்முகநாதன்
இவ்வைத்தியசாலையில் பல குறைப்பாடுகள் தொடர்ச்சியாக இருக்கின்றது. நாங்கள் தோட்டத்தில் தான வேலை செய்கின்றோம் வருமானம் மிகவும் குறைவு இலவசமாக சிகிச்சை பெறலாம் என நினைத்து வைத்தியசாலைக்கு சென்றால் வைத்தியரால் தனியார் கடைகளில் மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு துண்டு வழங்குகின்றார்கள். வறுமை காரணமாக தான் அரச மருத்துவசாலைக்கு செல்கின்றோம் இங்கும் இப்படி செய்தால் எங்களால் என்ன செய்ய முடியும் அரசாங்கம் எங்களை ஏமாற்றுகின்றதா ? வைத்தியசாலையில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பாக மலையக அரசியல் வாதிகளிடம் கடிதம் மூலம் பல முறை கடிதம் கொடுத்த போதிலும் இதுவரை எந்த அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை கூறியவிடயம்.
திரு. இராமகிருஸ்ணன்
அரசாங்கத்தால் இலவசமாக மருத்துவ சேவை வழங்குவதாக கூறுவது பொய்யான விடயம் வைத்தியசாலையை நம்பி சென்றால் சாவுதான் வைத்தியர் பரிசோதனை செய்தாலும் மருந்து கொடுப்பதுக்கு அதிகாரிகள் இல்லை வேறு வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் போக்குவரத்து வசதி இல்லை. வைத்தியர் ஒருவர் மாத்திரமே உள்ளார் அத்தோடு மருந்துகள் இருக்கின்ற போதிளும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது வைத்திய அதிகாரியால் பாமசியில் மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு துண்டுகள் வழங்குகின்றார்கள் வசதி இருப்பவர்கள் வாங்கமுடியும் வசதி இல்லாதவர்கள் என்ன பன்னுவது தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வந்த தலைவர்கள் எங்களின் குறைப்பாடுகளை கண்டுக்கொள்வதில்லை. அத்தோடு சில தலைவர்கள் குறைப்பாடுகளை; எங்களிடம் கேட்பதோடு குறைகளை நிவர்த்தி செய்யாமல் நழுவி செல்கின்றனர். எனவே இவ்வைத்தியசாலையில் காணப்படும் குறைப்பாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திரு. ராஜேந்திரன் தெரிவிக்கையில்
பெருந்தோட்ட தொழிலார்களின சேமநலன் கருதி தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் தொழிலாளர்களின் நன்மையை கருத்திற்கொண்டு செயல்ப்பட்டது.
ஆனால் தற்போது இவர்களின் சய இலாபத்தினை மற்றுமே கருத்திற்கொண்டு செயல்ப்பட்டு வருவது வேதனைக்குறிய விடயம் அத்தோடு இவ்வாறான சூழ்நிலை காரணமாக தொழிற்சங்கங்களின் பலமும் குறைவடைந்து வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையை கருத்திற்க்கொண்டு செயல் படுவது இன்றைய கட்டாயமாகும்.