GuidePedia

சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனக்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஹவார்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றிடம் இருந்து இரண்டு விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கடந்த அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித அறிவுறுத்தல்களும் இல்லாது 326 வர்த்தக நிலையங்களில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக சுமார் மதுவரி திணைக்களம் தனக்கு அறிக்கை அனுப்பியதாகவும் தான் அவற்றை மூடுவதற்கான பரிந்துரைகளை முன்வைத்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எனினும் இந்த வர்த்தக நிலையங்களை மூடுவதால், வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் போகும் என திறைசேரி தனக்கு அறிவித்தது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
புகையிலை பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் திறைசேகரிக்கு 60 பில்லியன் ரூபா வருவாய் கிடைத்து வந்ததுடன் மதுபான உள்ளிட்டவற்றால் 55 பில்லியன் வருவாய் கிடைத்து வருகிறது.
இதுதான் தற்போதைய நிலைமை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புகையிலை இல்லாத இலங்கை என்ற தலைப்பில் நடைபெறும் தேசிய மாநாடு ஒன்றை இன்று ஆரம்பித்து வைத்து பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
புகையிலை மற்றும் மதுபானத்தை கட்டுப்படுத்த கடந்த 5 வருடங்களில் தன்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை செய்துள்ளதாகவும் எனினும் கடந்த அரசாங்கத்தின் தலைவர்களிடம் இருந்து அதற்கு சிறியளவிலேனும் ஆதரவு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அபாயத்தில் இருந்து பாடசாலை மாணவர்களையும், மக்களையும் காப்பாற்றுவதற்காக புகையிலை மற்றும் மதுபானம் பற்றிய கெடுதிகளை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.



 
Top