GuidePedia

இலங்கை அரசியலில், இன்று வரலாற்று சிறப்புமிக்க நாளாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
1978ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அதிகார வர்க்க முறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஜே.ஆர்.ஜயவர்தனவினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்வு கண்டுள்ளார். இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தனவும், மஹிந்த ராஜபக்ஷவும் தோல்வியடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான புதிய ஆட்சி நாட்டில் உருவாகியது. புதிய அரசு நாட்டில் ஆட்சி அமைத்த நாள் முதல், இது பொய்யான அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், எமது அரசின் வாக்குறுதியை நாம் தற்போது நிறைவேற்றியுள்ளோம்.
19இனூடாக, ஜனாதிபதியின் பதவிக்காலம், ஆறு வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி பதவி 2 தடவைக்கு மட்டுப்படுத்தப்பட்டுமுள்ளது.
முன்னர் ஜே.ஆர். ஆட்சியில் நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, அவர் ஆட்சிக்கு வந்தவுடன், 18ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்தி அதனூடாக அதிகாரங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதற்கு அக்காலப்பகுதியில் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு இத்தருணத்தில் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.
19 நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். இதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



 
Top