GuidePedia

(TNN)
நாட்டில் தற்போது ஏராளம் ஜனாதிபதிகள் உள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார்.
இவர் தாய்நாடு ஆசிரியருக்கு இன்று கொழும்பில் வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-
“ நாட்டில் தற்போது ஏராளம் ஜனாதிபதிகள் உள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு ஜனாதிபதி. சம்பந்தனும் ஒரு ஜனாதிபதி. ரவூப் ஹக்கீமும் ஒரு ஜனாதிபதி. அனுர குமார திஸநாயக்கவும் ஒரு ஜனாதிபதி. சம்பிக்க ரணவக்கவும் ஒரு ஜனாதிபதி. தேசிய நிறைவேற்றுக் குழுவில் உள்ள ஒவ்வொருவருமே ஜனாதிபதிகள். ஆனால் மைத்திரிபால சிறிசேனவை தவிர மற்ற அனைவரும் ஜனாதிபதிக்கு உரிய அதிகாரங்களை பயன்படுத்துகின்றனர். ஒரு நாட்டில் ஒரு ஜனாதிபதியே இருக்க வேண்டும்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகின்றது. என்னால் இதை தேசிய அரசாங்கம் என்று ஒப்புக் கொள்ள முடியாது. ஆளும் தரப்பினரைக் காட்டிலும் எதிர்த் தரப்பினரே நாடாளுமன்றத்தில் பலமான நிலையில் உள்ளனர். ஆனால் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் நல்ல விடயங்களும் உள்ளன.
புதிதாக அரசாங்கம் எதையுமே செய்யவில்லை. குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டு இருக்கின்றது. எமது அரசாங்கம் விட்டுச் சென்ற அபிவிருத்தி வேலைகள், திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் குறையில் உள்ளன.
கடந்த கால அழிவு யுத்தத்தால் தமிழர்கள் மாத்திரம் அன்றி முஸ்லிம்கள், சிங்களவர்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அனைவரும் யுத்தத்தின் வடுக்களில் இருந்து மீட்கப்பட வேண்டும். இதற்காகவே எமது அரசாங்கம் புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை வடக்கு, கிழக்கு அடங்கலாக நாடு முழுவதும் முன்னெடுத்தது.
வடக்கு, கிழக்கில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்டு இருந்த பொது மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்க எமது அரசாங்கமே நடவடிக்கை எடுத்து இருந்தது. ஆவணங்களை தயார்ப்படுத்தினோம். ஜனாதிபதி என்கிற வகையில் எனது கையொப்பத்தை ஆவணங்களில் இட்டு இருந்தேன். 
நாங்கள் திருப்பி கையளிக்க இருந்த காணிகளையே இப்போதைய அரசாங்கம் கையளித்து விட்டு வீண் பெருமிதப்பட்டு கொள்கின்றது. ஆனால் காணி மீள கையளிப்பு ஆவணங்களில் எனது கையொப்பமே உள்ளது.
பொதுபலசேனா என்கிற அமைப்பை உருவாக்கியவர், இவ்வமைப்புக்கு பின்னால் உள்ளவர் உண்மையில் சம்பிக்க ரணவக்கவே ஆவார்.  இது அனைவருக்கும் தெரிந்த இரகசியம் ஆகும். ”



 
Top