GuidePedia

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட பிக்குமாரை குற்றவாளி கூண்டிலில் ஏறுமாறு உத்தரவிட்ட கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த சில்வா, இந்த பிக்குமாருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
புனித குர் ஆனை அவமதித்தமை, வட்டரெக்க விஜித தேரர் தலைமையிலான ஜாதிக பல சேனா அமைப்பின் செய்தியாளர் சந்திப்பை குழப்பியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கு இதற்கு முன்னர் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது கோட்டை நீதவானாக பணியாற்றிய திலின கமகே, பிக்குமார் குற்றவாளி கூண்டிலில் ஏறுவது அவசியமற்றது எனக் கூறியிருந்தார்.
எனினும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேக நபர்களான பிக்குமாறு குற்றவாளி கூண்டிலில் ஏறி நீதிமன்றத்தில் நேர்நிலையாக வேண்டும் என நீதவான் பிரியந்த சில்வா உத்தரவிட்டதாக முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பிரதிவாதிகளான பிக்குமாருக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமையை முடிவுக்கு கொண்டு வர நீதவான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த வழக்கில் ஆஜரான பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து வந்தனர்.
எனினும் சட்டமா அதிபரின் ஆலோசனை தேவையில்லை என தெரிவித்துள்ள நீதவான் பிரியந்த சில்வா, குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த வழக்கு குறித்து கருத்து வெளியிட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இந்த வழக்குகள் துரிதமாக முடிவுக்கு வருவதை காண வேண்டிய தேவையிருப்பதாக கூறியுள்ளார்.
வழக்கு விசாரணைகளை ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.



 
Top