அண்மையில் திறக்கப்பட்ட காத்தான்குடி பூர்வீக நூதன சாலை இன்று ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. காரணம் இந்த நூதனசாலையில் பல சிலைகள் வடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகும். காத்தான்குடி மக்கள் தங்கள் வீடுகளில் கூட சிலைகளை வைத்திருப்பதில்லை. இஸ்லாம் சிலைகளையோ உருவங்களையோ வணங்குவதற்கு எதிரான மார்க்கம். உருவ வழிபாடோ சிலை வழிபாடோ இஸ்லாத்தில் இல்லாததுதான் உலகில் இஸ்லாம் ஏனைய மதங்களில் இருந்து வேறுபட்டு நிற்பதற்கு பிரதான காரணமாகும். எனவே இவ்வாறான வணக்கத்திற்கு எமது நூதன சாலையில் உள்ள சிலைகள் அடிகோலும் என்ற காரணத்தினாலும் இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டித்துள்ளது.
முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த நூதன சாலை அமைப்பதில் தீவிரமாக பங்கெடுத்தவர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சொன்னதன் பின்னரும் இந்த நூதன சாலையில் சில திருத்தங்களை இவர் மேற்கொள்வதுதான் சரியான வழிமுறையாகும். அவ்வாறு இல்லாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என்று அடம் பிடிப்பது ஒரு பிழையான நடவடிக்கையாகும்.
2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கு சுட்டிக்காட்டலாம் என நினைக்கின்றேன். தேர்தல் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலே சகோதரர் ஹிஸ்புல்லாஹ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹாங்கிரஸில் இருந்தார். குறிப்பிட்ட அன்றைய தினம் நியமனப்பத்திரத்திலே இவர் கையொப்பம் இடுவதாக இருந்தது. அன்று பகல் சாப்பாடும் அமைச்சர் ரஊப் ஹக்கீம் உடன் இருந்து சாப்பிட்டார். சாப்பிட்டவர் நியமன பத்திரத்தில் கையொப்பம் இடாமல் தனக்கு வயிறு குழம்பியுள்ளதாகவும் வீட்டிற்கு சென்றுவிட்டு வந்து நியமனப்பத்திரத்திலே கையொப்பம் இடுகின்றேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர் வரவே இல்லை. அன்று இரவு ஜனாதிபதி மகிந்தவின் இல்லத்தில் சாப்பிட்டுவிட்டு பொது சன ஐக்கிய முன்னணி சார்பாக வேட்பாளராக இறங்குவதற்கு அவர்களது நியமனப்பத்திரத்திலே கையொப்பம் வைத்து விட்டார். சகோதரர் ஹிஸ்புல்லாஹ் ஸ்ரீ லாங்கா முஸ்லிம் காங்கிரஸில் தேர்தல் கேட்காமல் பொது சன ஐக்கிய முன்னணியில் தேர்தல் கேட்டதனால் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் கிடைக்கவேண்டிய ஒரு வரலாற்று சந்தர்ப்பம் அன்று கைநழுவிப்போனது.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுடன் அப்பம் சாப்பிட்டுவிட்டு சென்று அவருக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட விடயம் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது பரபரப்பாக பேசப்பட்டது போல் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் சகோதரர் ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் ரஊப் ஹக்கீமுடன் பகல் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வருகிறேன் என்று கூறிவிட்டு பொது சன ஐக்கிய முன்னணியில் சேர்ந்த விடயம் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது பரபரப்பாக பேசப்பட்டது.
மைத்திரி பாலசிறிசேனா அப்பத்தைத்தான் சாப்பிட்டார். அவர் நாட்டை சாப்பிடவில்லையே. ஆனால் இன்று நாட்டையே சாப்பிட்டவர்கள் நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு ஹிஸ்புல்லாஹ் பொது சன ஐக்கிய முன்னணியில் கட்சி மாறி கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டதற்கு காரணம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைச் சேர்ந்த உலமாக்களும் குறிப்பாக அதன் தலைவர் றிஸ்வி முப்தியும் தன்னை கட்சிமாறி தேர்தல் கேட்கச் சொன்னதுதான் தான் கட்சிமாறியதற்கு காரணமென குறிப்பிட்டார். அமைச்சர் ரஊப் ஹக்கீமின் வீட்டில் பகல் சாப்பிட்டுவிட்டு வந்த தன்னை உலமாக்கள் மடக்கிப்பிடித்து கட்சி மாறவைத்ததாக சொன்னார்.
இவ்வாறு தனக்கு தேவைப்பட்ட விடயத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சாதகமாக கருத்து சொன்னால் அதனை கேட்பது தனக்கு தேவைப்பட்ட விடயத்திற்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருத்துச் சொன்னால் அதனை கேட்பதில்லை என்ற நிலைப்பாடு சரியானதல்ல. தேர்தல் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கருத்தை கேட்காமல் இருந்தால்கூட பராவாயில்லை. ஆனால் சிலை விடயம் மார்க்க விடயம். இதிலே நாங்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலாமவின் கருத்தை நாங்கள் கட்டாயம் கேட்கத்தான் வேண்டும்.
சென்ற வாரம் மாளிகாவத்தை ஜும்ஆப் பள்ளிவாயலின் ஜும்ஆப் பிரசங்கத்தில் அதனை நிகழ்த்திய கதீப் காத்தான்குடி சிலை விவகாரத்தையே முக்கியமாக கருப்பொருளாக கொண்டிருந்தார். சிலை வைத்தமைக்கு எதிராக அதனை கண்டித்து மிகக்காரசாரமாக தனது பயானை அமைத்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு முக்கியமான விடயத்தை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “ஹிஸ்புல்லாஹ் தனது ஊரில் சிலை வைக்கின்ற ஒரு கலாசாரத்தை ஏற்படுத்தினால்தான் ஹிஸ்புல்லாஹ்வின் மரணத்திற்கு பின் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மக்கள் சிலை வைப்பார்கள் என்று ஹிஸ்புல்லாஹ் எதிர்பார்க்கின்றார்” என அந்த கதீப் தனது ஜும்ஆப் பிரசங்கத்தில் கூறியிருந்தார். எனவே அவர் குறிப்பிட்ட இந்த விடயத்தையும் நாங்கள் ஆழமாக உற்று நோக்க வேண்டும். எனவே இவ்வாறான நிலமைகள் காத்தான்குடியில் உருவாவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.
காத்தான்குடியானது இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு ஒரு தலை நகரமாக பார்க்கப்படுகின்ற ஒரு ஊர். மார்க்க விடயங்களாக இருந்தாலும் சரி, மற்ற விடயங்களாக இருந்தாலும் சரி காத்தான்குடி முன்மாதிரியாக திகழ்கின்ற ஒரு ஊர். மார்க்க அறிஞர்களும் துறைசார்ந்த அறிஞர்களும் நிறைந்த ஊர். எனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனையை பெற்று நூதனசாலையில் திருத்தங்களை மேற்கொள்வதுதான் ஹிஸ்புல்லாஹ் கடைப்பிடிக்க வேண்டிய சரியான வழியாக இருக்கும். இல்லாவிட்டால் குளிக்கபோய் சேறு அள்ளிப்பூசியதாகத்தான் முடியும்.
இவ்வண்ணம்
மர்சூக் அஹமட் லெவ்வை
முன்னாள் நகர பிதா
கத்தான்குடி
28.04.2015