(றிப்கான் கே சமான்)
அறிஞரும், சிறப்பான ஒரு தலைமைத்துவ ஆற்றறலைக் கொண்டவருமான எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய
தேசியக் கட்சியின் வன்னிமாவட்ட பிரதான அரமப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தான் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் நான் இணைந்த போது சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்து ஓய்வுபெற்றுச் சென்றவர்களில் இவரும் ஒருவர், திணைக்களத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றாலும் அதன் சக ஊழியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அவ்வப்போது வழங்கியதோடு திணைக்களத்தின் வளர்ச்சிக்காகவும் சமூகத்தின் விடிவிற்காகவும் பல்வேறு சேவைகளைச் செய்தவர்.
இராஜாங்க அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றும் பொதும் எமது சமூகத்திற்காக பல்ஆவறு உதவிகளையும் தென்கிழக்கு பேரவை உறுப்பினராக இருந்தபோதும் கூட இந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக சமூக சேவைகளை அதிக ஆர்வத்துடன் செய்தவர்.
சாதி மத வேறுபாட்டையும் கடந்து சகலருடன் சமமாகப் பழகிய இவர் சமய மற்றும் கலை, கலாசாரத்திற்கெனவும் எழுத்துத்துறைக்கும் ஏராமான சேவைகளை செய்வதில் முதன்மையானவராகவும் திகழ்ந்தார்.
நான் வக்பு திணைக்களத்தில் வேலைசெய்யும் போதும், நான் பாராளுமன்றம் சென்ற பிறகும் கூட, வக்பு தொடர்பான விடயங்கள், நிர்வாக விடயங்கள், ஏனைய ஆலோசனைகளை எனது நண்பன் போன்று தேவையான ஆலோசனைகளை தேவையான சந்தர்ப்பத்தில் வழங்கி வந்துள்ளார்.
இவ்வாறு சமூக சிந்தனையும், நல்லெண்ணமும், சிறந்த மார்க்கப் பற்றும் கொண்ட இவரின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அல்ஹாஜ எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களினால் செய்யப்பட்ட சமூக சேவைகளையும், அவரால் முன்னெடுக்கப்பட்ட சகல நற்பணிகளையும் வல்லவன் அல்லாஹ் பொருந்திக் கொள்வதுடன் மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தையும் வழங்குவதற்கு வல்ல நாயன் அல்லாஹ்தஆலாவிடம் பிரார்த்தனை செய்வதோடு இவரின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.