GuidePedia

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ இந்தியா உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஆப்கன் அதிபர் வருகை

ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனி நேற்று இந்தியா வந்தார். அவரை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில், இரு நாட்டு உறவுகள், பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் பேசினார்கள். ஆப்கானிஸ்தானுக்கு 3 ராணுவ சீத்தல் ஹெலிகாப்டர்கள் வழங்கவும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

அமைதி நிலவ


ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவவும், ஸ்திரத்தன்மைக்காகவும் இந்தியா ஆதரவு அளிக்கும். ஆப்கானிஸ்தானில் வன்முறையின் நிழல் இல்லாத அரசியல்சாசன நடவடிக்கைகளை வெற்றிகரமாக எடுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்மூலம் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமுதாய திட்டங்கள் வலுப்படுத்தப்படும்.

ஆப்கன் பெண்கள் உள்பட சமுதாயத்தின் அனைத்து பகுதியினரின் உரிமைகளையும், எதிர்பார்ப்புகளையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வன்முறைக்கு ஆதரவு தெரிவிப்பதை வெற்றிகரமாக தடுக்க அண்டை நாடுகளின் நேர்மறையான மற்றும் உறுதியான அணுகுமுறையும் தேவைப்படுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 



 
Top