தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக சில வாரங்களாக கட்சிகளுக்கிடையே கலந்துரையாடல்கள் நடைபெற்றுவந்தது. இதன் உச்சக்கட்டமாக கடந்த 19ஆம் திகதி பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் சிறிய கட்சிகள் கூடி கலந்துரையாடின.
இந்தக் கலந்துரையாடலில் முப்பதுக்கும் அதிகமான கட்சிகளும் பொது அமைப்புக்களும், கபே போன்ற அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தன. இந்த கலந்துரையாடலுக்கான அழைப்பில் 19ஆவது திருத்தச் சட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய சில சரத்துக்களை சேர்த்துக் கொள்வது தொடர்பாகவும், புதிய தேர்தல் முறை தொடர்பாக பிரதான கட்சிகளுக்கு சிறிய கட்சிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக ஆரோக்கியமாகவே நடைபெற்றது. ஆரம்பத்தில் கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றிய வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய சில விடயங்களையிட்டும், பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தில் தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும், தேர்தல் முறைமை தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளோம் என்று ஆரம்பித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறுக்கிட்டு, 13ஆவது திருத்தத்தைப் பற்றியோ, 19ஆவது திருத்தத்தைப் பற்றியோ இங்கே கலந்துரையாட நான் அழைக்கப்படவில்லை. தேர்தல் முறைமை தொடர்பாகவே கலந்துரையாட வந்துள்ளேன். அழைப்புக்கு மாறாக பேசுவதென்றால் நான் வெளிநடப்புச் செய்வேன் என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்.
அத்தோடு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் அழைப்பின் நோக்கத்தை தெளிவுபடுத்தாமல் தேர்தல் முறைமை தொடர்பாக பேசுவதென முடிவு செய்ததோடு கலந்துரையாடல் தொடங்கியது.
இதில், ஜே.வி.பி, ஈ.பி.டி.பி, ஹெல உறுமய, த.தே.கூ, முஸ்லிம் காங்கிரஸ், ரி.எம்.வி.பி, சிறிரெலோ, ரி.யு.எல்.எப், இ.தொ.க, ம.ம.மு. ஜ.ம.மு, இடதுசாரிக்கட்சிகள், ஏனைய முஸ்லிம் கட்சிகள், மலையக கட்சிகள் என பல முக்கிய சிறிய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தை பார்த்தபோது அரசியலில் முக்கியமான நிகழ்வாக அது அமைந்திருந்தது. அதை வரவேற்கலாம்.
கூட்டத்தை பார்த்தபோது அரசியலில் முக்கியமான நிகழ்வாக அது அமைந்திருந்தது. அதை வரவேற்கலாம்.
இவர்கள் அனைவருமே விருப்பு வாக்கு முறைமையை நிராகரித்தார்கள். தொகுதிவாரி முறைமையும், விகிதாசார முறைமையும் இணைத்து புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அந்த புதிய முறையிலும் சிறிய கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்களை தேர்தல் முறைமையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள்.
ஆனால் எந்தவொரு புதிய தேர்தல் முறைமையையும் வரைவதற்கும், அது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் குறைந்தது ஒரு வருடமாவது தேவையாக இருப்பதையும் சுட்டிக்காட்டிய இவர்கள், அடுத்து நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள்.
இன்னொரு கட்டத்தில் விருப்பு வாக்கு முறைதான் உண்மையான ஜனநாயக முறை என்றும் ஏன் என்றால், யாரைத் தெரிவு செய்யவேண்டுமென்பதை மக்கள் சரியாக தெரிவு செய்து வாக்களிக்கும் முறைமை தற்போதுள்ள விருப்பு வாக்குமுறைதான் என்றும் கூறினார்கள்.
ஆனால் விருப்பு வாக்குமுறையால், கட்சிகளுக்கு உறுப்பினர்கள் கட்டுப்படாததையும், கட்சியின் வெற்றியாக அது அமையாமல் தனிப்பட்டவர்களின் செல்வாக்கை உயர்த்திவிடுகின்ற சூழலையும் இந்த விருப்பு வாக்குமுறை கொண்டிருப்பதாக இலேசான இயலாமையையும் சிலர் கூறினார்கள்.
அரசாங்கமோ அல்லது பெரும்பான்மை கட்சி ஒன்றோ தாம் நினைத்தபடி சட்டத்திருத்தம் ஒன்றை முன்வைக்கவோ, நிறைவேற்றவோ இடமளிக்காதவகையில், சிறிய கட்சிகளையும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யும் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதைப் பாதுகாக்கவும் வேண்டும் என்பதை எல்லோருமே ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
சிறிய கட்சிகள் ஒருமித்த செய்தி ஒன்றை அரசுக்கும், பெரிய கட்சிகளுக்கும் கொடுக்க முடியும் என்றவாறாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது மற்றுமொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது.
பொதுவாகவே அரசியல் கட்சிகள் இரகசியமாகவே சந்திப்புக்களை நடத்திவிட்டு, வெளியில் ஊடகங்களுக்கு அப்படிப்பேசினோம், இப்படிப்பேசினோம் என்று கூட்டு முடிவொன்றை அறிவிப்பார்கள். அதில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு ஏற்புடையதும் இருக்கும், ஏற்புடையதற்றதும் இருக்கும்.
ஆனால் இங்கே ஊடகங்களை கலந்துரையாடல் நடைபெற்ற மண்டபத்துக்குள்ளேயே அனுமதித்திருந்தார்கள். கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் எவரும் குறுக்கறுத்து கேள்விகளைக் கேட்கவில்லை. ஊடகவியலாளர்கள் அந்தக் கலந்துரையாடலின் பார்வையாளர்களாகவே இருந்தார்கள்.
கருத்துக்களும், தர்க்கங்களும் வெளிப்படையாகவும், ஆரோக்கியமாகவும் அமைந்திருந்ததற்கு ஊடகவியலாளர்கள் பார்வையாளர்களாக இருந்ததும் சிறிய காரணமாக இருந்திருக்கும்.
அண்மையில் சுன்னாகம் தண்ணீர் விவகாரத்தை வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுனர், யாழ்ப்பாண அரச அதிபர் மற்றும் அதிகாரிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் ஆராயும் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அதற்குக் காரணம், ஊடகவியலாளர்கள் குழப்பக்காரர்கள் என்றும், விடயங்களை முன்னுக்குப் பின் முரணாக கையாண்டு மக்களை குழப்பிவிடுகின்றார்கள் என்றும் கூறப்பட்டது. ஊடகவியலாளர்களை குழப்பக்காரர்களாக அடையாளப்படுத்தும் அதே காலகட்டத்தில், கொழும்பில் சரித்திர முக்கியத்துவமிக்க பல கட்சிகள் நடத்திய கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களை பார்வையாளர்களாக அனுமதித்திருந்தது சிந்தனைக்குரியதாகிறது.
இப்படி ஒரு கலந்துரையாடலை நடத்துவோமென அமைச்சர் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பிரபா கணேசன், டக்ளஸ் தேவானந்தா, சுமந்திரன் ஆகியோர் முடிவு செய்ததாகவும், டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன் ஆகியோர் சிறப்பாக அந்த முடிவை நடைமுறைப்படுத்தியதாகவும் கலந்து கொண்ட கட்சிகள் கூறி தமது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் முடிவாக புதிய தேர்தல் முறைமையானது, சிறுபான்மை மக்களையும், சிறிய கட்சிகளையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெளிவுபடுத்துவதென்றும், இதற்கான முன்னெடுப்பை செய்வதற்கு அனைத்துக் கட்சிகளின் சார்பில் குழுவொன்றை தெரிவு செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.
அதேவேளை, தமது வற்புறுத்தலை பரிசீலித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்வரை தேர்தல் முறை யோசனையை காலதாமதம் செய்யலாமென்றும், அடுத்து நடைபெறவுள்ள தேர்தலை தற்போதுள்ள முறைமையின்படியே நடத்தவேண்டும் என்றும் செய்தியை வெளிப்படுத்துவதென்றும் ஏகமனதாக முடிவு செய்தார்கள்.
அரசியல் கொள்கைகளிலும், அணுகு முறைகளிலும், வேறுபாடான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இவ்வாறு பொது நோக்கத்திற்காக ஒரே மேசையில் ஆரோக்கியமான பேச்சுக்களை நடத்துகின்ற சூழல் எதிர்காலத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த ஒற்றுமை கட்சிகளின் அரசியல் பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்வதில் மட்டுமல்லாது, நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் பொது நிலைப்பாட்டை எட்டுவதற்காகவும், தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் பிரயோகிக்கப்படவேண்டும்.
அப்படி ஒரு அடிப்படை ஒற்றுமை கட்சிகளுக்கிடையே இருக்குமானால், அரசியல் பிரச்சனை உட்பட அடிப்படைப் பிரச்சினை, நாளாந்தப் பிரச்சனை என எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வைக் காணக்கூடிய பலமிக்க சக்தியாக உருவெடுக்க முடியும்.
-ஈழத்துக் கதிரவன்-