GuidePedia

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டும் என அந்த நாட்டு துணை தூதர் கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
கட்டிடங்கள் தரைமட்டம்
இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகளை புரட்டிப்போட்டது.
தலைநகர் காட்மாண்டு அருகே உள்ள லாம்ஜங் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூகம்பம், காட்மாண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகள், ஓட்டல்கள், கோவில்கள் என கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாயின.
வெளிநாட்டினரும் சாவு
மேலும் சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு என அனைத்தும் துண்டிக்கப்பட்டு வெறுமையாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவை நேபாளம் சந்தித்து உள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்ததில் பொதுமக்கள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டினர், சுற்றுலாப்பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரை விட்டனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்கும்
நேற்று மாலை வரை 3 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 6 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய தூதரக அதிகாரியின் மகள் உள்பட 5 இந்தியர்களும் இந்த பூகம்பத்துக்கு பலியாயினர்.
இன்னும் பல்வேறு பகுதிகளில் கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டியுள்ளதால், இந்த பூகம்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
துணை தூதர்
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டும் என இந்தியாவுக்கான நேபாள துணை தூதர் சந்திர குமார் கிமிரே கூறியுள்ளார். இந்த பேரிடருக்காக நேபாள பிரதமரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவதற்கான வங்கி கணக்கு ஒன்றை நேற்று கொல்கத்தாவில் தொடங்கிய அவர், இது குறித்து கூறியதாவது:–
இந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்ட வாய்ப்பிருப்பதாக எங்கள் நிதி மந்திரி நேற்றே (நேற்று முன்தினம்) கூறியுள்ளார். அதையே நானும் கூறுகிறேன். நேபாள வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று.
இந்தியாவுக்கு நன்றி
இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் மட்டுமின்றி, எங்கள் அடையாளமாகவும், கலாசார, பாரம்பரிய சின்னங்களாகவும் விளங்கிய ஏராளமான கட்டுமானங்கள் அழிந்து விட்டன.
இந்த பேரழிவின் போது இந்திய அரசும், மக்களும் எங்களுக்கு அருகில் ஒரு பாறை போல நின்று எங்களுக்கு உதவி வருகின்றனர். இதற்காக எங்களது மிகப்பெரிய நன்றியை கூறிக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் அச்சம்
நேபாளத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கு திரும்பினாலும் பிணங்களும், மக்களின் அழுகுரலாகவுமே உள்ளது. அத்துடன் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதிகளில் ஒருவித குழப்பமும், பரபரப்பும் நிலவி வருகிறது.
அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் நீடித்து வருவதால் இடிந்து விழாமல் இருக்கும் வீடுகளிலும் மக்கள் குடியிருக்க அஞ்சுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெட்டவெளி கூடாரங்களில் தங்கியுள்ளனர்.
இந்திய விமானங்கள்
இந்த பயங்கர நிலநடுக்கத்தால் தேசிய பேரிடரை சந்தித்துள்ள நேபாளத்துக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. குறிப்பாக பூகம்ப மீட்புப்பணிகளுக்காக உடனடியாக களத்தில் குதித்த இந்தியா, ராணுவம் மற்றும் விமானப்படையை அனுப்பி நேசக்கரம் நீட்டியுள்ளது.
இதற்காக இந்திய விமானப்படையின் 13 போர் விமானங்கள், 3 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள், 2 இலகு ரக ஹெலிகாப்டர்கள் உள்பட சுமார் 25 விமானங்கள் அங்கு மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த சுமார் 1000 பேரும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.
நிவாரண பொருட்கள்
பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 டன் போர்வைகள், 50 டன் தண்ணீர் பாட்டில்கள், 22 டன் உணவு பொருட்கள் மற்றும் 2 டன் மருந்துகளை மத்திய அரசு காட்மாண்டுக்கு அனுப்பி வைத்தது. மேலும் ராணுவ மருத்துவர்கள் உள்பட பல்வேறு மருத்துவக்குழுக்களும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன.
இந்திய மீட்புக்குழுவினர் பூகம்பம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று மாலை வரை சுமார் 1935 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
பூகம்ப மீட்புப்பணிகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்வதற்காகவும் மத்திய உள்துறை அமைச்சக குழு ஒன்று நேற்று காட்மாண்டு போய் சேர்ந்தது. பி.கே.பிரசாத் தலைமையிலான இந்த குழுவினர், நேபாள அரசுடன் இணைந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து நடத்துவர்.
தொடர் மழை
இதற்கிடையே பூகம்பம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது மேலும் 24 மணி நேரத்துக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு நில அதிர்வுகளும் நீடித்து வருவதால் மீட்பு பணிகளில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
இந்த மழையால் வெட்டவெளிகளில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அதிக கூடாரங்களும், மருந்து பொருட்களுமே நேபாளத்தின் தற்போதைய தேவை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.



 
Top