GuidePedia

கூரகல பள்ளிவாசல் உடைப்பு தீர்மானத்தை வாபஸ் வாங்க முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக அரசுடன் பேச வேண்டும். இல்லாவிடின், ஹக்கீம், ரிசாத் ஆகிய முஸ்லிம் கட்சிகளுக்கெதிராக முஸ்லிம்கள் தமது ஜனநாயக ரீதியலான எதிர்ப்பை காட்ட முன்வர வேண்டும் என முஸ்லிம் உலமா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது பலாங்கொட பள்ளிவாயலை உடைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை மஹிந்த ராஜபக்ச தடுத்து நிறுத்தினார். எனினும் அப்பள்ளிவாயலை உடைக்க முற்பட்டோரை கைது செய்யாமை அவரது அரசின் தவறாகும். இதனை அவருடன் அமைச்சரவையில் இருந்த ஹக்கீம் கட்சியினரோ ரிசாத் கட்சியினரோ கவனத்தில் கொள்ளவில்லை.
பின்னர் ஜனாதிபதி மாற்றப்பட்டு மைத்திரி ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்ட பின்னரும் மேற்படி பள்ளிவாயலை உடைக்க வந்தவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்யும் படி ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரீசோ அவரது கட்சியான முஸ்லிம் காங்கிரசோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரசோ அரசிடம் கோரிக்கை விடவில்லை.
ஒரு பள்ளிவாயலை உடைப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுத்து முடியும் வரை பேசாமல் இருந்து விட்டு, இது விடயமாக உலமா கட்சி கண்டனத்தை வெளியிட்ட பின்னரே விழித்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கூரகல பள்ளிவாசல் உடைப்பு தீர்மானத்தை வாபஸ் வாங்க முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உடனடியாக அரசுடன் பேச வேண்டும் எனவும் உலமா கட்சி மேலும் வலியுறுத்தியுள்ளது.



 
Top