GuidePedia

கோடை மழை கொட்டியதால் குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 12 வயது சிறுமியை வெள்ளம் இழுத்துச் சென்றது. அவளது கதி என்ன? என்பது தெரியவில்லை. சிறுமியை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
சிறுமி கதி என்ன?
நெல்லை மாவட்டம் குற்றாலம், தென்காசி பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்தது. மதியத்துக்கு மேல் மேகமூட்டமாக இருந்தது. பின்னர் விட்டு விட்டு சாரல் மழை தூறியது. மாலை 5 மணி அளவில் திடீரென வானம் இருண்டது. கோடை மழை சுமார் 30 நிமிடம் பலமாக பெய்தது.
இதனால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஆர்ச்சை தாண்டி கொட்டியது. இதில் செங்கோட்டையை அடுத்த பண்பொழி துர்க்கையம்மன் கோவில் விழா அபிஷேக தீர்த்தம் எடுப்பதற்காக சென்றவர்கள், அருவியின் ஓரத்தில் நின்று குடங்களில் தண்ணீர் பிடித்தனர். அப்போது முருகன் என்பவரது மகள் துர்காதேவி (வயது 12) வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டாள். அவளை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
3 பேர் பலி
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியை அடுத்த ஆலம்பூண்டார்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பூல்பாண்டி (52) மின்னல் தாக்கி பலியானார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பெரிய ஈசலாபுரத்தை சேர்ந்த விஜயன் (36), நேற்று மாடு மேய்த்தபோது மின்னல் தாக்கி இறந்தார். வாணியம்பாடி பகுதிகளில் சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை கொட்டியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மதியம் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த உஷா (42) மின்னல் தாக்கி இறந்தார்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று பிற்பகல் தொடங்கி 4 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டியது. சில பகுதிகளில் வீடு-கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது.
தஞ்சாவூரில் நேற்றும் மதியம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கோடை நெல் சாகுபடிக்கு இந்த மழை ஏற்றதாக இருந்தது. ஈரோட்டில் நேற்று மாலை சுமார் 15 நிமிடம் கடுமையான மழை கொட்டியது. மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி, விரகனூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை பெய்யவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பொன்குண்டுபட்டி கிராமத்தில் பசு மாடு ஒன்று மின்னல் தாக்கி இறந்தது.



 
Top