எகிப்து நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி என்ற பெயரை பெற்றவர் முஹம்மது முர்சி. ஆனால் அதே மக்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலையும் வந்தது. இதையடுத்து 2013–ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தபோது, அவற்றை ஒடுக்கும் விதத்தில் போராட்டக்காரர்களை சித்தரவதை செய்து, கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2012–ம் ஆண்டு, ஜனாதிபதி மாளிகைக்கு எதிரே நடந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவியது தொடர்பான வழக்கை கெய்ரோ நீதிமன்றம் ஒன்று விசாரித்து வந்தது.
இந்த வழக்கில், முர்சிக்கும், தடை செய்யப்பட்ட அவரது சகோதரத்துவ கட்சியினர் 14 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
முர்சியையும், மற்றவர்களையும் கொலை குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றம் விடுவித்து விட்டது. கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருந்தால் முர்சிக்கும், மற்றவர்களுக்கும் மரண தண்டனை விதித்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
