GuidePedia

முன்னணி தேடியந்திரமான கூகுள், புராஜக்ட் பை (Project Fi ) எனும் பெயரில் வயர்லெஸ் செல்போன் சேவையை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
இணைய உலகில் தேடியந்திரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் கூகுள், இணைய வசதி வழங்குவதற்கான புராஜக்ட் லூன் போன்ற திட்டங்களையும் சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறது.
இதனிடையே கூகுள், வயர்லெஸ் அடிப்படையிலான செல்போன் சேவை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. புராஜக்ட் பை எனும் பெயரில் அமெரிக்காவில் இந்த திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த சேவை மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பும் வசதியுடன் இணையத்தையும் பயன்படுத்தலாம்.
குறைந்த கட்டணத்தில் வேகமான சேவை எனும் வர்ணனையோடு கூகுள் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதில் சர்வதேச அழைப்புகளையும் பயன்படுத்தலாம்.
கூகுள் சொந்தமான செல்போன் அறிமுகம் செய்திருந்தாலும், இதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளான செல்போன் கோபுரம் போன்றவற்றை அது அமைக்கவில்லை. மாறாக, அது ஏற்கனவே செல்போன் சேவைகளை வழங்கி வரும் ஸ்பிரிண்ட் மற்றும் டி-மொபைல் நிறுவனங்களூடன் இணைந்து இந்த சேவையை வழங்குகிறது. இது தவிர வயர்லெஸ் வசதியையும் பயன்படுத்திக்கொள்ளும்.
குறிப்பிட்ட இடத்தில் எந்த சேவை வேகமாக இருக்கிறதோ அந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும்படி இந்த திட்டம் செயல்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. அதேபோல, வயர்லெஸ் சேவை செயல்படும் இடங்களில் செல்போன் சேவைக்கு பதிலாக வயர்லெஸ் வசதியை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் இது தன்னை மாற்றிக்கொள்ளும். இதன் மூலம் பயனாளிகள் எப்போதும் வேகமான செல் சேவை மற்றும் இணைய இணைப்பை பெற முடிவதுடன் வயர்லெஸ் பயன்பாட்டால் செலவும் குறைவும் என கூகுள் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள கூகுளின் நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன் அவசியமாகும். மற்ற போன்களில் இது செயல்படாது.
கூகுளின் இந்த சேவை தொலைதொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம் என பேசப்படுகிறது. ஆனால், கூகுள் நெக்சஸ் போன் மூலமே இதை அணுகலாம் என்பதால் மற்ற நிறுவனங்களுக்கு இதனால் அதிக பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.
மேலும், செல்போன் துறையில் பெரிய நிறுவனங்களின் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை சிறிய நிறுவனங்கள் வாடகை அடிப்படையில் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன. அந்த முறையில்தான் கூகுளின் திட்டமும் செயல்படுகிறது.
எனினும், இந்த வயர்லெஸ் செல்போன் சேவை மூலம் கூகுள் தனது தேடியந்திரம் மற்றும் ஜிமெயில், யூடியூப் போன்ற சேவைகளை முன்னிறுத்துவதில் ஆர்வம் காட்டும் என்று கூறப்படுகிறது.



 
Top