வடக்கில் விடுதலைப்புலிகள் அட்டகாசம் செய்த நேரம் அது.முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் அட்டூழியப்படுத்தப்படும் தருணம் பெரல்கள் வெடித்தது,துப்பாக்கி ரவைகள் பாய்ந்தது.கணவன்மார் கடத்தப்பட்டு விதவைகளுமாக தந்தையை இழந்து அநாதைகளுமாக முஸ்லிம்கள்.யுத்த காலத்தில் நோய் வாந்தி,பேதிக்கு,வைத்தியத்துக்கு,வாத்தியத்துக்கு.போக்குவரத்து செய்பவர்கள் என்று எவராக இருந்தாலும் சோதனை செய்து அவர்கள் பணத்தை புலிகள் பறித்தனர்.வியாபாரிகள் செல்வந்தர்களிடம் புலிகள் அளவுக்கதிக கப்பம் பெற்றனர்.சிலரை கடத்தி கொலையும் செய்தனர்.பணம் இல்லாதவரை உதைத்தனர்.வடக்கு முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தலைமை என்று யாரும் இல்லை.அரச பாதுகாப்பும் இல்லை.அரசியல் அநாதையாக இருந்த காலம் அது.
சொந்த பூமியில் நாடோடியாக அடிமைப்பட்டு வாழ்ந்தது போதாமல் அகதியாக செல்லும் நேரமும் வந்தது.24 மணிநேர கெடு கொடுக்கப்பட்டு முஸ்லிம்கள் சொந்த பூமியைவிட்டு செல்ல வேண்டும் என்று வேண்டப்பட்டனர்.போகும் வழியில்கூட இருக்கும் நகைகளை,பணத்தை,சொத்தை புலிகளுக்கு கொடுத்துவிட்டே வரவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.அங்கு முகாமிட்டிருந்த ராணுவம்,பொலிஸ் வடக்கில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டனர்.மக்களை அதோ கதியில் விட்டுவிட்டு அவர்களும் சென்றனர்.மக்கள் வடக்கைவிட்டு வெளி மாகாணங்களுக்கு சென்றனர்.
புத்தளமே அருகில் இருந்ததால் அங்கு முகாமிட்டனர் முஸ்லிம்கள்.வீடும் இல்லை.தொழிலும் இல்லை.கையில் பணமும் இல்லை என சொல்லில் கொண்டுவர முடியாத துன்பங்கள் நெஞ்சில் பொறுக்க முடியாத துயரங்களுடன் முஸ்லிம்கள் புத்தளத்தில் அகதி முகாமிட்டனர்.அகதி முகாமில் பொதுக்கிணறுகள் பொது கழிவறைகள் என்று ஒருபக்க அவலமும்,அவை தாங்க முடியாமல் வெடித்து நாற்றம் எடுக்கும்போது மறு அவலம்.மழைக்காலம் வந்தால் வெள்ளம்.வெள்ளம் முடிந்தால் ஓலை ஈக்கில் வீட்டுக்குள் மண்கசிவு,ஈர நிலம் என்று அவர்களின் அவதிகள் பற்றி சொல்லிக்கொண்டே போக முடியும்.இவ்வாறு வடக்கு முஸ்லிம்கள் பிரச்சினைகள் இன்றுவரை தொடர்கதையாகவே இருந்துவருகிறது.இதன் அடுத்த கட்ட பிரச்சினையாக வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்ட அசமந்த போக்குகள் அதற்கான எதிர்கால திட்டமிடல் அற்ற நகர்வுகள்.அகதி முஸ்லிம்களை வெறும் அரசியல் நோக்கங்களுக்காக உபயோகப்படுத்தும் கண்துடைப்பு நிவாரணங்கள்,புணர்நிர்மானம் என்ற பெயரில் ஏமாற்றுக்கள் என்று அவர்கள் சோக கதைகள் ஊடகங்களில் பேசப்படாமல் சமூக அநீதி ஒன்று நடந்தவண்ணமே உள்ளது.
இப்படியான ஒரு சமூக பிரச்சினையை நமது ஊடகங்கள் எந்த வகையில் கையாள்கிறது என்பதை பேசவே இக்கட்டுரை.இலங்கை முஸ்லிம்களின் சஞ்சிகைகள்,பத்திரிகைகளில் அதிகம் பேசப்பட்டது வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினையா?வெளிநாட்டு முஸ்லிம்களின் பிரச்சினையா? என்ற நியாயமான கேள்வியுடன் ஊடகங்களின் பொறுப்புக்களை மனவேதனையுடன் உளக்குமுறலுடன் இங்கு பகிர்கிறேன்.
முஸ்லிம்களின் வாராந்த,மாதாந்த,காலாண்டு சஞ்சிகைகள் ஊடக ஒழுங்கையும் பொறுப்புணர்ச்சியையும் மீறும்போது இவர்களுக்கு நாளாந்த வெளியீட்டு உரிமை கிடைத்தால் என்ன நடக்கும் என்பதையும் தமிழீழ பிரச்சினைகளை தமிழர்கள் ஊடகங்கள் எவ்வாறு சர்வதேசமயப்படுத்தின என்பதையும் முன்னுதாரணமாக நாம் எடுக்க தவறிவிட்டோம் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.
இலங்கையில் தமிழர்களின் பத்திரிகைகள் ஊடகங்கள் ஈழ மக்கள் பிரச்சினையை பேசியதன் விளைவு இந்திய,பிராந்திய,ஐரோப்பிய,அமெரிக்க அரேபிய ஊடகங்கள் ஈழப்பிரச்சினையை சர்வதேசப்படுத்தியது என்று சொல்ல முடியும்.
எகிப்தின் பிரபல ஊடகம் ஒன்று விடுதலை புலிகளை "நடுநிலை போராளிகள்" என்று வர்ணித்திருந்தது.இதற்கு காரணம் அவர்கள் செய்தி எடுத்த இடம் மேற்கத்திய ஊடகங்கள் என்பதும் மேற்கத்திய ஊடகங்களின் தாக்கம் அரபு ஊடகங்களில் ஏற்பட்டு முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்து அவர்களை அகதியாக்கிய ஒரு தீவிரவாத இயக்கம் அரபு மீடியாக்களில் நடுநிலைவாதிகளாக காட்டப்பட்டனர்.(ஆனாலும் மிகவும் அரிதான செய்தியாக வடக்குகிழக்கு முஸ்லிம்கள் பற்றி சவுதியின் "முஸ்தக்பல்" எனும் சஞ்சிகையில் விடுதலை புலிகளின் கொடூர காட்டுமிராண்டி கொலைகளை இஸ்ரேலின் "மொசாட்டின்"திட்டமிடலில் நடந்திருக்க வாய்ப்பிருந்ததாக எழுதி இருந்தது.)
தமிழர்கள் பிரச்சினை,விடுதலை புலிகள் பற்றிய பார்வை ஊடகங்களின் பிரச்சாரம் மூலமே அவர்களுக்கு சார்பானதாக மாறியது.தமிழர்கள் அவர்கள் பிரச்சினையை பல கவன ஈர்ப்பின் மூலம் ஊடக ஒழுங்கின் மூலம் நடத்திகாட்டியதால் அதில் வெற்றி பெற்றார்கள்.நாம் அரபு செய்திகளில் அரபிகள் பிரச்சினையை பற்றி அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் நமக்கு என்ன நன்மை?நமது பிரச்சினைகள் பற்றி எழுதி அதற்கான பிரச்சாரத்தில் ஓரளவு வெற்றி கண்டபின் சர்வதேச பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் பிழை இல்லை.அரபிகள் பிரச்சினையை பேசவும் விழிப்புணர்வு செய்யவும் பல ஆயிரம் தேசிய சர்வதேச ஊடகங்கள் உள்ள நிலையில் நாம் நமது பிரச்சினையை விட்டுவிட்டு ஊடகங்களில் இடம்பிடித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்குமா?குறைந்த பட்சம் அரபிகள் பிரச்சினைகளுக்கு நமது நாட்டில் தீர்வுகள் உண்டா?
நமது ஊடக பொறுப்பு நமது பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதில் தங்கியுள்ளதா?இல்லை சர்வதேசம் அறிந்த நாளாந்தம் சர்வதேச ஊடகம் வெளியிடும் செய்தியை நாம் நகல் எடுப்பதில் தங்கியுள்ளத?இதுதான் நாம் செய்யும் ஊடக தர்மமா?இதுதான் நமது சமூக பிரச்சினையை சமூக எழுச்சியை கையாளும் விதமா?தமிழ் சமூகத்துக்குள் நம்மை நாம் உட்படுத்தாமல் தனித்துவம் கருதி முஸ்லிம்கள் என்ற தனி அடையாளத்துடன் எமது சமூகத்தை முன்மொழியும் நாம் எமது உறவுகள் பிரச்சினையை தனித்துவமாக எழுத ஏன் முன்வரவில்லை?
அன்று இலங்கையில் முஸ்லிம்களால் ஏற்கவே முடியாத பேருவளை,தர்கா நகர் இனவெறி தாக்குதலை தேசிய செய்தி ஊடகங்கள் தணிக்கை செய்தபோதும் இணையதளங்கள்,சமூக வலைதளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்து வெற்றிகண்டோம் அல்லவா.இதையே நாம் ஏன் வடக்கு முஸ்லிகள் விடையத்தில் காட்டுவதில்லை.
இவ்விடையத்தில் இலங்கையின் அச்சூடகங்கள்,இலத்திரணியல் ஊடகங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற யோசனை ரசனை அற்ற ஊடக ஒழுங்கில் செல்லும்போது நாம் நமது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை சரியாக கொண்டு சேர்க்க அவர்களின் அதே வழிமுறையை பின்பற்றினால் முடியுமா?
தேசிய ஊடகங்கள் முஸ்லிம்கள் பிரச்சினையை சரியாக சொல்லவில்லை என்பதால் நமக்கென்று ஒரு ஊடகம் வேண்டும் என்றோம்.நம்மிடம் ஊடகம் கிடைத்த பின் தேசிய ஊடகத்தின் அதே அணுகுமுறையை நாமே பின்பற்றுகிறோம்.
வடக்கு முஸ்லிம்களுக்காக களத்தில் நிற்க வேண்டும்.கிளர்ச்சி செய்ய வேண்டும்.போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் என்று எதையும் நாம் ஊடகங்களிடம் எதிர்பார்க்கவில்லை.மாறாக நாம் எதிர்பார்ப்பது வடக்கு முஸ்லிம்கள் பிரச்சினைகளில் அவர்களுக்கான தீர்வுகள்,அவர்கள் விடையத்தில் இலங்கை அரசின் பொடுபோக்கு நிலைபாடு,சர்வதேசத்தின் கடமை,பொறுப்பு,அவர்களின் மீள்குடியேற்றம்,புனர்நிர்மாணம் பற்றிய எதிர்கால திட்டவரைபு.வடக்கு முஸ்லிம்களின் அசையும் அசையா சொத்துக்களில் ஏற்பட்ட நஷ்டங்கள் தொடர்பான ஆவணக்குரிப்பு,அதற்கான உளப்பூர்வ நஷ்ட ஈடுகள் பற்றிய முன்மொழிவு,அதற்காக அவர்களை பிரநிதிதிதுவம் செய்யும் அரச,சமூக தலைமையின் பங்களிப்பு,அக்கறை என்பது பற்றிய வாசிப்பை முஸ்லிம் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் தூய்மையான எண்ணத்துடன் கொண்டு வரவேண்டும்.
அண்மையில் நடந்த பேருவளை தர்கா நகர் அசம்பாவிதம் பற்றிய செய்திகளை பல இணையதள ஊடகங்கள் கொண்டுவர கொடுத்த முயற்சியை,முக்கியத்துவத்தை கூட இலங்கையில் வெளியாகும் முஸ்லிம்களின் அச்சூடகங்கள்கூட கொடுக்கவில்லை என்பது முஸ்லிம்களின் ஊடக மனசாட்சியில் ஏற்பட்ட கோளாறு என்பதே ஆகும்.
மாற்றூடகம் தேவை என்பதை மக்கள் உணர முன் முஸ்லிம்களில் பிரபலம் பெற்ற ஊடகங்கள் தமது பொறுப்புணர்வை உணர்ந்து வடக்கு முஸ்லிம்களின் அவலங்களை,அவர்கள் ஓலங்களை,அவர்கள் விடையத்தில் இரு பெரும்பான்மை இனம் காட்டிய துவேச செயல்பாடுகளை, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான திட்டங்களை,அவர்களுக்கு ஏனைய முஸ்லிம்கள் செய்ய வேண்டிய உதவிகளை பற்றிய விழிப்புணர்வுகள் அதிகம் ஊடகமயப்படுத்த முன்வர வேண்டும்.சர்வதேச செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதி அளவேனும் வடக்குமுஸ்லிம்கள் விடையத்தில் கொடுக்க வேண்டும்.
பேருவளை,தர்கா நகர் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமையை பற்றி அதிகம் எழுதியவன் என்ற வகையில் வடக்கில் பிறந்த நான் என் சமூகத்துக்கு ஏற்பட்ட அவலம் அநீதி கொடுமைகள் பற்றி எழுதியே ஆகவேண்டும்.இது பற்றி என் உள்ளத்தில் ஏற்பட்ட வடுக்கள், ரணங்கள் என் சமூகத்தின் உள்ளத்தில் ஏற்பட்ட ரணம் காயத்தின் பிரதியே,அதன் வெளிப்பாடே.என் சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும்,உணர்வுகளையும்,தேவையையும் வேதனையின் வெளிப்பாடாக உங்களிடம் தருகிறேன்.உங்கள் ஊடாக எமது ரெத்த உறவான வடக்கிலங்கை முஸ்லிம்களின் தேவையை,எதிர்பார்ப்பை,நெருக்கடியை ஊடகமயமாக்கும் ஒத்துழைப்பை தருவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
இது ஒரு குடும்ப பிரச்சினையோ ஒரு கிராமத்தின் பிரச்சனையோ அல்ல.இது ஒரு சமூக திரளின் இறந்த கால நிகழ்கால எதிர்கால பிரச்சினையின் ஒரு சிறு வடிவத்தையே உங்கள் முன் கொண்டு வந்துள்ளேன்.
புலிகளின் ஆக்கிரமிப்பில் ஒரு அவல வாழ்க்கை.அகதி முகாம்களில் மீண்டுமொரு அவல வாழ்க்கை.சீரான திட்டமிடலற்ற மீள்குடியேற்றம் எனும் பெயரில் மூன்றாம் கட்ட ஏமாற்று வாழ்க்கை என்று முஸ்லிம்களின் முக்கால பிரச்சினைகள் முக்கோண வடிவில் ஒரு சமூக அநீதியாக அதே சமூகத்துக்கு மீண்டும் மீண்டும் நடந்தேறிய வண்ணம் இருக்கிறது.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் "ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான்"(புகாரி)
இந்த நபிமொழியில் கூறப்பட்ட சமூக நீதி,சகோதரத்துவ பிரகடனத்தை உங்களுக்கும் நினைவூட்டி நமது முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தமது சகோதரன் பிரச்சினையில்,வேதனையில் உதவிக்கரத்துடன் அதை பிரச்சாரம் செய்வதில் மாற்றூடகமாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Cairo-Egypt
