சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு இவரை எதிரியாகவே நடத்தியது.
இவரால் முன்வைக்கப்பட்ட தீர்வுப் பொதியை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து எதிர்த்தது.
விடுதலைப் புலிகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விரோதியாக கண்டே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தினர். புலிகளின் வாலை அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பிடித்துக் கொண்டு நின்றது.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக கே. என். டக்ளஸ் தேவானந்தா விளங்கினார்.
அப்போதெல்லாம் சந்திரிகாவின் சேலையை பிடித்துக் கொண்டு நிற்கின்றார் டக்ளஸ் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நக்கல் அடித்து வந்திருக்கின்றனர். இதற்கு டக்ளஸும் பதிலடி கொடுத்து வந்திருக்கின்றார்.
“ நான் சந்திரிகாவின் சேலையை பிடித்துக் கொண்டு நிற்கின்றேன். எப்போது வேண்டுமானாலும் விட்டு விடுவேன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் புலியின் வாலை பிடித்து வைத்து உள்ளனர். இவர்கள் வாலை விட்டால் புலி கடித்துக் குதறி விடும். ”
இவ்வாறு டக்ளஸ் சூடாகவே பதில் கொடுத்து வந்திருக்கின்றார்.
இப்போது பகிடி என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திரிகாவுடன் சந்தோசம் கொண்டாடுகின்றது. தந்தை செல்வாவின் 38 ஆவது ஆண்டு நினைவுப் பேருரை இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற உள்ளது. நினைவுப் பேருரை நடத்துபவர் சந்திரிகா அம்மையார். தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் சட்டத்தரணி கே. வி. தவராசா தலைமை தாங்குகின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சி தலைவர் மாவை. சேனாதிராசா ஆகியோரும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
- அவதாரன்-
