லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு முன் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ, பேரணியோ இன்று (வியாழக்கிழமை) நடத்தக்கூடாது என கொழும்பு பிரதான நீதவான் தடை விதித்துள்ளார்.
இன்று ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடைபெறலாம் என்பதை கருத்தில் கொண்டு கொழும்பு பொலிஸார் முன்வைத்த அறிக்கை ஒன்றை அடுத்தே நேற்று நீதவான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆனால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு எதிராக இன்று காலை 08.30 – 09.30 மணிவரை ஆணைக்குழு முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பிவிதுரு ஹெல உருமய தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதுவாயினும் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் வேறு இடங்களில் நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
