GuidePedia

இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்று விளையாட விரும்புகிறேன் என்று அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் சச்சினினுடன் மட்டையை சுழற்றிக் கொண்டு களமிறங்க வரும் ஷேவாக்கை கண்டு எதிரணி வீரர்கள் மிரண்டு போவார்கள். ஆனால் திடீரென ஷேவாக்கின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.
கடந்த 2 வருடத்திற்கும் மேலாக அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. கடைசியாக 2013ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று ஆடியிருந்தார். அதன் பிறகு அணியில் இடம் பெறவில்லை.
அவர் கூட இதுதொடர்பாக பேசியதில்லை. இப்போது முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து ஷேவாக் கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டு அவுஸ்திரேலியா, இங்கிலாந்து தொடரின்போது எனக்கு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து எனக்குத் தலைவலியும் வந்தது. இதனால் என்னால் சரியாக ஆட முடியவில்லை.
இந்தியா வந்ததும் எனது மருத்துவரிடம் ஆலோசனை நடத்தியபோது தூரப் பார்வை பிரச்சனை இருப்பதை அவர் கண்டுபிடித்தார். இதுவே கண் வலிக்கும், தலைவலிக்கும் காரணம் என்று அவர் கூறினார்.
இதையடுத்து நான் கண்ணாடி போட ஆரம்பித்தேன். அதற்குப் பழக்கப்படவே எனக்கு ஒரு வருடமாகி விட்டது. என்னால் பந்தை சரியாக கணித்து அடிப்பதில் சிரமம் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாட இன்னும் ஆசை உள்ளது. என்னால் முடிந்தவரை சிறப்பாக ஆட முயற்சிப்பேன். இந்திய அணியில் இடம் பெற்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
ஷேவாக் சர்வதேச போட்டிகளில் 16,000 ஓட்டங்களை குவித்துள்ளார். இதுவரை 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.
தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் அதிரடி ஆட்டத்தை காட்டி வருகிறார்.



 
Top