GuidePedia

ஜப்பானிய ரயில் ஒன்று அதிவேகமாக ஓடுவதில் முன்னர் இருந்த சாதனையை முறியடித்து புதிய உலகச் சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
ஃபூஜி மலைப் பகுதிக்கு அருகே நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் மணிக்கு 600 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்த ரயில் வண்டி மிக அதிக காந்த சக்தி மூலம் இயங்குகிறது. ஓடும் ரயில் தண்டவாளங்களைத் தொடாமல் அதியுயர் காந்த சக்தி மூலமே செயல்படும் இந்த வண்டி, ஈர்ப்பு விசை மற்றும் இதர சக்திகளை சமன்படுத்தி பயணிக்கும்.
தலைநகர் டோக்யோ மற்றும் நகோயா நகருக்கு இடையே 2027 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனம் எண்ணியுள்ளது.
இந்த அதிவேக ரயில் வண்டி 283 கிலோமீற்றர் தூரத்தை நாற்பது நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பயணிக்கும்.
ஆனாலும் இந்தச் சாதனை வேகத்தை ரயில் பயணிகள் தமது பயணத்தில் அனுபவிக்க இயலாது என அந்த ரயில் வண்டி சேவையை நடத்தும் ஜப்பான் மத்திய ரயில்வே கூறியுள்ளது.
ஏனெனில் மிக அதிகபட்சமாக மணிக்கு 505 கிலோ மீற்றர் வேகத்திலேயே தங்கள் அதை இயக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
2003ஆம் ஆண்டு மணிக்கு 581 கிலோ மீற்றர் என்ற வேகத்தைப் பதிவு செய்த ஜேஆர் சென்ட்ரல், கடந்த வாரம் மணிக்கு 590 கிலோ மீற்றர் என்ற சாதனையை நிலைநாட்டியது. அதனை அந்தக் கம்பனியே முறியடித்திருப்பது சிறப்பம்சமாகும்.
மெக்லெவ் ரயில் வண்டி தண்டவாளத்தில் இருந்து 10 சென்ரி மீற்றர் உயரத்தில் வழுக்கிச் செல்வதுடன், மின்னேற்றப்பட்ட காந்தங்களின் மூலம் முன்னோக்கி உந்தப்படுகிறது.



 
Top