ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.
அங்கு அதிபர் ஆதரவு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபிய கூட்டுப்படைகள் தொடர்ந்து வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் இரவில், அல் ஆனத் என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த நாட்டின் மிகப்பெரிய விமான தளத்தில் இருந்து வெளியேறிய ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கவச வாகனங்கள் மீது சவுதி கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தின. இதில் 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 4 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன.
ஏடன் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மோதல்களில் 40 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 32 பேர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆவார்கள்.
ஏடனுக்கு வடக்கேயுள்ள டாஸ் என்ற இடத்தில், அதிபர் ஹாதி ஆதரவு படை வீரர்களுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது. இந்த சண்டையில் 16 பேர் பலியாகினர். இதில் பொதுமக்களில் மூவரும் அடங்குவர்.
