GuidePedia

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளும் உள்ளடங்கியதாகவே புதிய தேர்தல் மறுசீரமைப்பு தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றத்தில் ஆராயவும் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளவும் சுமார் 3 மாத காலம் பிடிக்கும் என ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார்.
புதிய திருத்தத்தின் பிரகாரம் தொகுதிவாரியூடாக 165 உறுப்பினர்களும் மாவட்ட விகிதாசார அடிப்படையில் 66 உறுப்பினர்களும் தேசியப் பட்டியலினூடாக 24 உறுப்பினர்களும் தெரிவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையாளரினால் தயாரிக் கப்பட்ட யோசனையின் பிரகாரம் கட்சிகளின் கருத்துகளுடன் புதிய தேர்தல் மறுசீரமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய மறுசீரமைப்பின்படி 255 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
சில கட்சிகள் சில பகுதிகளுக்கு மட்டுப்பட்டே இருக்கின்றன. அவர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மாறாத வகையிலும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையிலும் புதிய திருத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் அவசரமாக கொண்டு வரப்பட்டதல்ல இந்த திருத்தத்தில் சகல கட்சிகளினதும் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியாது.
19 ஆவது திருத்தத்துடன் இதனையும் நிறைவேற்ற உத்தேசித்துள்ளோம். 20 ஆவது திருத்தத்தையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அதன் வியாக் கியானத்தை பெற வேண்டும். எல்லை நிர்ணயத்திற்கு தேர்தல் ஆணையாளர் 3 மாத கால அவகாசம் கோரியுள்ளார். புதிய தேர்தல் மறுசீரமைப்பின் கீழே அடுத்த பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும்.



 
Top