GuidePedia

புதிய ஜனாதிபதி நாட்டினை கொண்டுசெல்தற்கு அனைத்து பொறுப்புக்களையும் வழங்கிவிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலின்போது, நாட்டினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் உரிமைசார் அதிகாரங்களை புதிய ஜனாதிபதிக்கு வழங்கிவிட்டு செல்வதாக தெரிவித்தார்.
இன்னும் பல தொகுதிகளின் வாக்கு முடிவுகள் வெளிவராத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று காலை இடம்பெற்ற விரிவான கலந்துரையாடலையடுத்து, மக்களின் வாக்கிற்கு மதிப்பளித்து அவர் அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.
தேர்தல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தற்போதைய முடிவுகளின் அடிப்படையில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51 வீத வாக்குகளை பெற்று 7 வீதத்தால் முன்னிலையில் உள்ளார்.
இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு, நேற்று சுமூகமான முறையில் நடைபெற்றது. இதில் தமிழ் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் மைத்திரிபால சிறிசேன அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த பெரிதும் எதிர்பார்த்திருந்த கொழும்பிலும் சரிவை எதிர்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இம்முறை தேர்தலில் களமிறங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன, கடந்த நவம்பர் மாதம் கட்சி மாறி எதிரணியின் பொது வேட்பாளராக அதிரடியாக களமிறக்கப்பட்டார்.
எதிர்வரும் 13ஆம் திகதி பரிசுத்த பாப்பரசரும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், முழு உலக நாடுகளும் திரும்பிப்பார்க்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதி தேர்தலாக இது கருதப்படுகிறது.
கடந்த மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக இலங்கையில் நிலவிவந்த யுத்தத்தை கடந்த 2009ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிகொண்டதையடுத்து, அவர் இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் பிரபலமடைந்தமை குறிப்பிடத்தக்கது.



 
Top