தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் மீளவும் தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சில வேளைகளில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவின் செயற்பாடுகளை அவதானிக்கும் போது ஆயுதமற்ற தமிழீழ விடுதலைப் புலி பிரிவினைவாதம் தூண்டப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா போன்ற தேசிய அமைப்புக்களை அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சாகள் அழித்துவிடக் கூடாது என அவர் கோரியுள்ளார். நல்லாட்சி என்ற பெயரில் தேசிய அமைப்புக்களை அழித்துவிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். நல்லாட்சி என்ற போர்வையில் புதிய அரசாங்கம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதுடன் அழுத்தங்களையும் பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் புதிய அரசாங்கம் அதிகார மோகத்தினால் பழிவாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கிற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிப்பதன் மூலமோ அல்லது கிழக்கில் முஸ்லிம் ஒருவரை ஆளுனராக நியமிப்பதன் மூலமோ தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.